27. ஒரு தனிமொழி பேசுவோர் தொன்றுதொட்டுத் தனிக் குலத்தினரா யிருந்திருத்தல் வேண்டும். பிற மொழியோடு சிறிதும் தொடர்பில்லாத ஒரு தான் றோன்றி மொழியிருப்பின், அதைப் பேசுவோர் தொன்று தொட்டுப் பிற குலத்தாரொடு தொடர்பில்லாத ஒரு தனிக் குலத்தினராயிருத்தல் வேண்டும். 28. மொழிநூற்கு மாந்தன் வாயினின்று தோன்றும் ஒவ்வோர் ஒலியும் பயன்படும். 29. ஒரு மொழியின் சொல்வளம் அதைப் பேசு வோரின் தொகைப் பெருமையையும் நாகரிகத்தையும் பொறுத்தது. 30. மொழிநூலாளர் பல மொழிகளைப் பேச வேண்டும் என்னும் யாப்புறவில்லை. முக்கியமான இரண்டொரு மொழிகளிற் பேசுந்திறனும், பிற மொழிகளின் இலக்கணவறிவும் சொல்லறிவும், மொழி நூலார்க் கிருந்தாற் போதும். 31. ஒரே மொழி பேசுவோரெல்லாம் ஓரினத்தா ரல்லர். பார்ப்பனரும் தமிழரும் ஒரே மொழி பேசுவதால் ஓரினமாகார். 32. மக்கள் நாகரிகத்தைக் காட்டுவதற்கு மொழியே சிறந்த அடையாளம். விலங்கினின்றும் மாந்தனை வேறுபடுத்துவது மொழி யொன்றே. அம் மொழியும் பலதிறப்பட்டு, அவற்றைப் பேசும் மக்களின் ஏற்றத்தாழ்வுகளைக் காட்டுவதாகும். 33. மொழிநூற் கலைக்கு நடுவுநிலையும் பொறு மையும் வேண்டும். இவ் விதி எல்லாக் கலைக்கும் பொதுவாயினும், மொழி நூற் கலைக்குச் சிறப்பாய் வேண்டுமென்பதற்கு இங்குக் கூறப்பட்டது. ஒருவர் பெருமை பாராட்டிக்கொள் ளும் பொருள்களுள், தாய்மொழியும் ஒன்று. ஆகையால், அதன் மீதுள்ள பற்றினால் நடுவுநிலையை நெகிழவிடக் கூடாது.
|