தமிழ்நாட்டில், நடுவுநிலை யாராய்ச்சிக்குத் தடையாக ஈருணர்ச்சிகளிருந்துவருகின்றன. அவற்றுள் ஒன்று, ஆரியத் திற்கு மாறாக இருப்பது உண்மையாயினும் கூறக்கூடாதென் பது. இன்னொன்று மதப்பற்று. சுவாமிநாத தேசிகர் திருவாசகம், பெரிய புராணம் முதலியவற்றைப் படிக்கலாமென்றும், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலியவற்றைப் படிக்கக்கூடாதென் றும் கூறியது மதப்பற்றாகும். ஓர் ஆராய்ச்சியாளன் ஒன்றை ஆராயும்போது, தன்னை மதமற்றவன்போலக் கருதினா லொழிய, அதன் உண்மை காணமுடியா தென்பது தேற்றம். “காய்தல் உவத்தல் அகற்றி யொருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண் உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண் குற்றமுந் தோன்றாக் கெடும்.” இனி, சிலர் கால்டுவெல் கூறியவாறு, ஒப்பியலறிவின்றி, ஒரு துறையிலேயே அமிழ்ந்து, உள்ளம் பரந்து விரியாமல் குவிந்தொடுங்கப் பெறுகின்றனர். நுண்ணிய மதியும் சிறந்த ஆராய்ச்சியியல்பும் உள்ள, காலஞ்சென்ற பா.வே. மாணிக்க நாயகர் ஒப்பியலறிவின்மையாற் பல செய்திகளை உண் மைக்கு மாறாகக் கூறிவிட்டனர். ஓங்கார வடிவினின்றும் தமிழெழுத்துகள் வந்தன வென்றும்; ஓ என்னும் வடிவம் உம என்னும் மலைமகள் பெயரும் லிங்கக் குறியும் சேர்ந்ததென்றும், சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தில், வகரம் அருளையும் யகரம் உயிரையும் நகரம் திரோதத்தையும் மகரம் மலத்தையுங் குறிக்குமென்றும், ஆய்தம் மூச்சொலியென்றும், அதன் துணைகொண்டு அரபி, ஹெபிரேயம் போன்ற மொழிகளைத் தமிழில் எழுதலாமென்றும், உடம்படுமெய் என்பது உடம்பு + அடும் + மெய் என்று பிரிந்து, பிறவியைக் கெடுப்பதென்று பொருள்படுமென்றும், ஒகரத்தின் மேல் பண்டைக்காலத்திற் புள்ளியிட்டெழுதினது, சிவ பெருமானின் தக்கண வடி வத்தைக் காட்டுதற்கென்றும், பலவாறு மயங்கிக் கூறினர் பா.வே. மாணிக்கநாயகர். இவையெல்லாம் பலவகை மலைவுகளுடையன என் பது ஆராய்ச்சியாளர் எல்லார்க்கும் புலனாகும். ஆயினும், இவற்றுள் ஒன்றைமட்டும், ஏனையோர்க்கும் தெரியும்படி இங்குக் கூறுகின்றேன்.
|