(7) ஐரோப்பியர் தமிழைச் சரியாய்க் கல்லாமை. கால்டுவெல் கண்காணியார், தமிழ் வடமொழித் துணை வேண்டாத தனிமொழி யென்றறிந்தும், தமிழர் உயர்நிலைக் கலைகளை ஆரியரிடத்தினின்றும் கற்றதாகத் தவற்றெண் ணங் கொண்டமையால், தமிழில் மனம், ஆன்மா என்ப வற்றைக் குறிக்கச் சொல்லில்லையென்றும், திரவிடம், சேரன், சோழன், பாண்டியன் என்னும் பெயர்கள் வட சொற்கள் என்றும், இன்ன என்னும் வடிவிற்கொத்த அகரச் சுட்டடிச்சொல் தமிழிலில்லை யென்றும், பிறவாறும் பிழைபடக் கூறினர். உவில்லியம் (William), கோல்புரூக் (Colebrooke), மூய்ர் (Muir) முதலியவரோவெனின், தமிழைச் சிறிதுங் கல்லாது, வடமொழியிலேயே மூழ்கிக் கிடந்து, இந்திய நாகரிக மெல்லாம் ஆரிய வழியாகக் கூறிவிட்டனர். மொழிநூற்கலையும் நூலாராய்ச்சியும் வரவர வளர்ந்து வருகின்றன. ஆகையால், சென்ற நூற்றாண்டில் தோன்றிய பல மொழிநூற் கருத்துகள் இந் நூற்றாண்டில் அடிபடும். பார்ப்பனர், ஆரியத்தை உயர்த்திக்கூறிய மேனாட்டார் சிலரின் கூற்றுகளைத் தங்கட்கேற்ற சான்றுகளாகப் பற்றிக் கொண்டு, அவற்றை மாற்றுகின்ற புத்தாராய்ச்சி தோன்றாத படி, பல வகையில் தமிழரை மட்டந்தட்டி வருகின்றனர். மேனாட்டில், உண்மை காணவேண்டுமென்று பெருமுயற்சி நடந்துவருகின்றது; ஆனால், கீழ்நாட்டிலோ உண்மையை மறைக்கவேண்டு மென்றே பெருமுயற்சி நடந்துவருகின்றது. கால்டுவெல் கண்காணியாரின் திராவிட ஒப்பியல் இலக் கணத்தின் முதலிரு பதிப்புகளிலும், இல்லாத (திராவிட நாகரி கத்தையிழித்துக்கூறும்) சில மேற்கோள்கள், மூன்றாம் பதிப்பிற் காணப்படுகின்றன. இவையெல்லாம் மொழிநூற் கலையின் முன்னேற்றத்தைக் குறியாது பிற்போக்கையே குறிக்கும்.
|