பக்கம் எண் :

146ஒப்பியன் மொழிநூல்

மறையன், செகிலன் முதலாயின மயங்கப் பெறாவென மறுக்க” என்பது நன்னூல் (எழு. 67) மயிலைநாதருரை.

(5) “ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒன்றே ணகாரம் இரட்டும்
பஃதென் கிளவி ஆய்தபக ரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகரம் ஆகும்”

(தொல். குற். 40)

ஒன்பதிற்கு முதலாவது வழங்கின பெயர் தொண்டு என்பது. தொண்டு + பத்து = தொண்பது - தொன்பது - ஒன்பது. தொண்பது முதலில் 90 என்னும் எண்ணைக் குறித்தது. அறுபது, எழுபது, எண்பது என்னும் பிற பத்தாம் இட எண்ணுப் பெயர்களுடன், தொண்பது என்பதை ஒப்பு நோக்குக.

தொண்ணூறு என்னும் பெயர், முதலாவது, 900 என்னும் எண்ணைக் குறித்தது, தொண்டு + நூறு = தொண்ணூறு. இதை அறுநூறு, எழுநூறு, எண்ணூறு என்னும், பிற மூன்றாம் இட எண்ணுப் பெயர்களுடன் ஒப்புநோக்குக.

தொள்ளாயிரம் அல்லது தொளாயிரம் என்பது, முதலாவது, 9000 என்னும் எண்ணைக் குறித்தது. தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் - தொளாயிரம். இதை ஆறா யிரம், ஏழாயிரம், எண்ணாயிரம் என்னும் பிற நாலாம் இட எண்ணுப் பெயர்களுடன் ஒப்பு நோக்குக.

தொண்டு என்னும் பெயர், எங்ஙனமோ, தொல்காப் பியர் காலத்திற்கு முன்பே உலகவழக்கற்றது; ஆயினும், செய்யுள் வழக்கிலிருந்தது. தொல்காப்பியரே தம் நூலில், தொடைத் தொகை கூறுமிடத்து,

“மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே
ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு
தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்
றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே”

(செய். 101)

என்று, தொண்டு என்னும் சொல்லை 9 என்னும் எண்ணைக் குறிக்க வழங்கியுள்ளார். “தொண்டுபடு திவவின்”1 என்றார் பெருங்கௌசிகனாரும்.


1. மலைபடுகடாம், 21.