உருபின்றி வருமொழிகளையும் ஏற்று நிற்கும். இப் பெயர்கள் எழுவாயாங்காற் றிரிந்தே நிற்கும். இத் திரிபே யுருபென்க. “இனி இறைவன் கடியன், காக்கும்; தையலாள் வரும்; உமையாளமர்ந்து விளங்கும்; கோன் வந்தான்; கோக்கள் வந்தார்; மரமது வளர்ந்தது; மரங்கள் வளர்ந்தன, இவ் விகுதிகளே உருபென்க. இவ் வுருபுகளைத் தொகுத்துமறிக. “இனி ஆயவன்முதல் நாற்சொல்லும் பாலால் இருப தாம். அவையே உருபு. சாத்தனானவன் வந்தான், இதனுள் எழுவாயும் உருபும் பயனிலையுங் காண்க. பிறவு மன்ன. இவற்றைத் தொகுத்து மறிக” என்று உரையும் கூறி, இறுதியில், “இவ் வெண்விதியோ டெழுந்த சூத்திரம் பிறர் மதங் கூறலேயாம். தன்றுணி புரைத்தலன்று” என்று அதன் புன்மையையும் குறித்தார். இங்ஙன மிருக்கவும், இன் றுஞ் சில மாணவரிலக்கண நூலாசிரியர், ஆயவன் முதலிய பெயர்கள் ஆ என்னும் பகுதியடியாய்ப் பிறந்த வினையால ணையும் பெயர்களென்பதையும்; அவை ஆயவனை, ஆயவ னால் என்று வேற்றமையுருபேற்கு மென்பதையும்; கட்டுரைச் சுவைபடப் பெயர்களை நீட்டவேண்டிய விடத்து வருவன வேயன்றி, இன்றியமையாது பெயர்களைத் தொடர்வனவல்ல வென்பதையும் அறியாமல், தமிழிலக்கணத்திற்கு முற்றிலும் முரணாக, அவற்றை முதலாம் வேற்றுமை யுருபுகளென்று வரைந்து வருகின்றனர். இனி, ஆயவன், ஆனவன் என்னும் வடிவங்கள் வெவ் வேறு சொற்களல்ல வென்பதையும்; அவற்றை வெவ்வே றாகக் கொள்ளின், ஆகிறவன் ஆபவன் என்பவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டு மென்பதையும்; ஆ என்னும் பகுதியினின்று பிறந்தவைபோலவே என் என்னும் பகுதியி னின்று பிறந்த, என்றவன், என்கின்றவன் முதலிய சொற்களும் பெயரோடு கூடி வழங்கு மென்பதையும் அவர் நோக்கிற்றிலர். நும் என்னும் பெயர் நூம் என்பதன் வேற்றுமைத் திரிபடியென்றும். நீயிர் என்னும் பெயர் நீ என்பதன் பன்மை யென்றும் அறியாது, தொல்காப்பியர் அவ் விரண்டையும் ஒன்றாயிணைத்ததே வழுவாயிருக்க, அவர் நும் என்ப தையும் நீயிர் என்பதையும், முறையே பிராதிபதிக மென்றும் பிரதமா விபக்தி
|