கடைக்கழகக் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 4ஆம் நூற்றாண்டுவரை என்பது, பண்டைத் தமிழ் நாட்டு வரலாற்றாராய்ச்சியாளர் பேரா. இராமச்சந்திர தீட்சிதர் முடிபு. “விண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” | (தொல். 1336) |
என்று தொல்காப்பியர் தம் காலத் தமிழகத்தை வண்ணித் திருப்பதால், எள்ளளவும் எதிர்ப்பின்றி மூவேந்தரே முடியு டையோராய் முத்தமிழ் நாட்டையும் தம் முன்னோர்போல் அறம் பிழையாது ஆட்சி செய்துவந்த நற்காலம் தொல் காப்பியரது என்பது அறியப்படும். மூவேந்தரும் தம்முள்ளும் தம் குறுநில மன்னரொடும் அடிக்கடி நிகழ்த்திய போரால் அமைதியின்மை தமிழகத்தில் நிலவியிருந்தமையே, கடைக்கழக இலக்கியம் அளிக்கும் காட்சியாகும். ஆதலால் தொல்காப்பியர் அத்தகைய காலத் திற்கு மிக முற்பட்டவர் என்பது தெளிவு. “ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய உயர்சொற் கிளவி இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல” | (தொல். 510) |
என்ற இலக்கண வரம்பு திருக்குறளிலும் கடைக்கழகச் செய்யுளிலும் மீறப்படுவதால், தொல்காப்பியர் காலம் கடைக் கழகத்திற்கு மிக முற்பட்டதாதல் வேண்டும். இனி, மேற்குறித்த 1336ஆம் நூற்பாவில் தொல்காப்பியர் “நாற்பெய ரெல்லையகம்” என்றொரு தொடர் மொழியால் தமிழகத்தைக் குறித்திருப்பது உற்று நோக்கத் தக்கது. நால் வேறுபெயர் கொண்ட எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பு என்பது அத் தொடரின் பொருள். நால்வேறு பெயர்கொண்ட எல்லையாவன : வடக்கில் வடுகநாடும் தெற்கில் குமரியாறும் கிழக்கில் கீழைக்கடலும், மேற்கில் குடமலையும். முதற்காலத்தில் குடமலைக்குக் கீழ்ப்பட்ட கொங்கு நாடே திருச்சிராப்பள்ளிக் கருவூரைத் தலைநகராகக் கொண்ட சேரநாடா யிருந்தது.
|