வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து, காடு கெடுத்து நாடாக்கிப் பொதியின்கண்ணிருந்து” என்று நச்சினார்க்கினியர் தொல்காப்பிய எழுத்ததிகாரவுரையிற் கூறி யிருப்பதின் பொருளையுணராது. அகத்தியரைக் கண்ண னுக்குப் பிற்பட்டவரென்று கூறுகின்றனர் சிலர். நச்சினார்க்கினியர் கூற்றில், துவரை என்றது மைசூரைச் சார்ந்த துவாரசமுத்திரத்தை. நிலங்கடந்த நெடுமுடியண்ணல் என்றது குறள் (வாமனத்) தோற்றரவு(அவதார)த் திருமாலை. இதுவரை நிகழ்ந்துள்ள திருமாலின் ஒன்பது தோற்றரவு களுள், குறள் ஐந்தாவதென்பதையும் இரகுராமன் ஏழாவ தென்பதையும், கண்ணன் கடையனென்பதையும் அவர் மறத்தனர்போலும்! இரகுராமர் காலத்தவரான அகத்தியர் கண்ணனுக்குப் பிற்பட்டவராதல் எங்ஙனம்? அரசரைத் திருமாலின் வழியினராகக் கூறுவது தமிழ்நாட்டு வழக்கமென்பதும், திருமாலின் முதல் ஐந்து தோற்றரவுகளும் தமிழ்நாட்டிலேயே நிகழ்ந்தனவென்பதும் பின்னர்க் கூறப்படும். அரசர் பதினெண்மரும் பதினெண் கோடி வேளிரும் என்றது, பதினெட்டுத் தமிழரசரையும் அவர்க் கீழிருந்த பதினெண் வகுப்புத் தமிழக் குடிகளையும். வேளிர் வேளாளர். அருவாளர் அருவா நாட்டார். பதினெண்கோடி வேளிர் என்றது பதினெண் குடி வேளிர் என்பதன் ஏட்டுப்பிழை. காடு கெடுத்து நாடாக்கியென்றது, அக்காலத்தில் மக்கள் வழக்கின்றியிருந்த பல காடுகளை அழிப்பித்து, அவற்றில் துவரையினின்றும் கொண்டுபோந்த குடிகளைக் குடியேற்றியதை. அகத்தியர் பொதியின்கண்ணிருந்தது, அலைவாயை (கபாடபுரத்தை)க் கடல் கொண்டபின். துவரை என்பது ஒரு செடிக்கும் ஒரு மரத்திற்கும் பெயர். தில்லைமிக்க இடத்தைத் தில்லை என்றாற்போல, துவரைமிக்க இடத்தைத் துவரை என்றது இடவனாகுபெயர். துவரை என்பது துவரா(பதி), துவாரா(பதி), துவாரகா என்று ஆரிய வடிவங் கொள்ளும். துவரை என்ற தென்னாட்டு நகர்ப்பெயரையே, பிற் காலத்தில் கண்ணன் ஆண்ட இடமாகிய, வடநாட்டு நகர்க்கிட்
|