பக்கம் எண் :

178ஒப்பியன் மொழிநூல்

அகப்பொருளிலக்கணத்தைக் கடவுட்கும் ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பைக் குறிக்கும் பிறிதுமொழி யுவமையாகவுங் கொண்டனர். இதையறியாது சில பார்ப்பனர் அகப்பொரு ளிலக் கணத்தைக் காமநூலென்கின்றனர்.

“ஆரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின்
காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர்
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே”

என்ற திருக்கோவைச் சிறப்புப்பாயிரச் செய்யுளே அவர்க்குச் சிறந்த விடையாகும்.

காமநூல் புணர்ச்சியின்பத்திற் கேதுவான பொருள்க ளையே கூறுவதாகும். ஒருவன் போர், கல்வி முதலிய தொழில் பற்றித் தன் மனைவியைவிட்டுப் பிரிந்துபோவதும், அவளி டம் சொல்லாமல் ஏகக் கருதியிருக்கும்போது, இரவில் தன்னையறியாமல் கனவிலுளறித் தன் போக்கை அவளுக் குத் தெரிவித்து விடுவதும் எங்ஙனம் காமநூலுக்குரிய பொருள் களாகும்? தமிழரின் இல்லற வாழ்க்கையைக் கருத்துப் புலனாக்கும் ஓவியமே அகப்பொருளிலக்கண மென்க.

இனி, புறப்பொருளையும், போர்த்தொழிலொன்றே கூறுவதென்றும், பிற கலைவளர்ச்சியைத் தடுப்பதென்றும் குறை கூறுகின்றனர் சில பார்ப்பனர். பிறமொழிகளி லில்லாத பொருளிலக்கணத்தை வகுத்த தமிழர், அங்ஙனம் பொரு ளிலக் கணத்தைக் குன்றக் கூறுவரா என்றும் சற்று நினைத் திலர். புறப்பொருட்குரிய எழுதிணைகளுள், ஐந்து திணை களில் அரசர்க்கும் மறவர்க்குமுரிய போர்த்தொழிலைச் சிறப் பாய்க் கூறி, வாகைத்திணையில் எல்லாத் தொழில்களையும் கலைகளையும் பாடாண்டிணையில் புகழ்நூல்களின் எல்லா வகைகளையும் அடக்கினர் முன்னை யிலக்கணிகள்.

வாகைத்திணையின் இலக்கணமாவது :

“வாகை தானே பாலையது புறனே
தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப”

(தொல். புறத்.15)

என்பது.