பக்கம் எண் :

பண்டைத் தமிழகம்177

பெரும்பாலும் வீட்டிலேயே நுகரப்படுவது. பொருள் முயற்சி பெரும்பாலும் வீட்டிற்கு வெளியே நிகழ்வது, மக்கள் தலைவ னான அரசனது பொருள் முயற்சி போர். அகம் வீடு. புறம் வீட்டிற்கு வெளி. புறப்பட்டான் என்னுஞ் சொல், வீட்டிற்கு வெளிப்பட்டான் என்ற கருத்துப்பற்றியே, வழிப்போக்குத் தொடங்கினான் என்று பொருள்படுவதாகும். ஆகவே, அகத்தில் நிகழ்வதை அகம் என்றும், புறத்தில் நிகழ்வதைப் புறமென்றும் முன்னோர் கொண்டனர் எனினும் பொருந்தும். அகம் என்பது செந்தமிழ்ச் சொல்லே. பார்ப்பனர் தம் வீடுகளைப் பிற குலத்தார் வீடுகளினின்றும் பிரித்துக் காட்டுவதற்கு அகம் என்னுஞ் சொல்லைத் தெரிந்து கொண்டனர்.

இனி, மக்கள் ஆண் பெண் என இருபாற்படுதலின், அவ்விருபால்பற்றிய தொழில்களையும் அகம் புறம் என வகுத்துக் கூறினர் என்று கொள்ளினும் பொருந்தும். உயர் திணையில் பெண்பாலே அழகுடையது. பெண் என்னும் சொல் விரும்பத் தக்கது அல்லது விரும்பத்தக்கவள் என்னும் பொருளையுடையது. விரும்பத்தகுவது இன்பமும் அழகும்பற்றி. இன்பத்திற்கு அழகு துணையாவது. இதனால், காமர் என்னும் விருப்பம்பற்றிய சொல் அழகு என்னும் பொருள்படுவதாயிற்று.

பெள் - பெண். பெட்பு = விருப்பம். பெண் - பேண். பேணுதல், விரும்புதல் அல்லது விரும்பிப் பாதுகாத்தல். பெண் - பிணா. பிணவு - பிணவல். பெள் + தை = பெட்டை - பெடை - பேடை - பேடு, பெண் வீட்டிலிருப்பவள். இதனா லேயே, இல், மனை, குடி என்னும் வீட்டுப்பெயர்கள் மனைவி யையுங் குறிக்கலாயின. அகத்திலுள்ள மனைவிபற்றியது அகப் பொருள். ஆண்பால் மறத்திற்குச் சிறந்தது. ஆள் - ஆண். ஆண் என்பது ஆள்வினைத் திறமையுடையது அல்லது மறமுடையது என்னும் பொருளது. ஆட்சி, ஆளல், ஆண்மை என்னுஞ் சொற்களை நோக்குக. ஆண் - (ஆடு) - ஆடவன். (ஆடு) - ஆடூஉ. ஆண்மைத் தொழில் போர்த்தொழிலும் பொருளீட்டலும். அகத்துக்கு (வீட்டுக்கு)ப் புறம்பே நிகழும் தொழில் புறப்பொருள்.

பொருளிலக்கணத்தைப்பற்றிச் சுருங்கச் சொன்னால், எல்லாக் கருத்துகளும் தொழிலும் பற்றிய மக்கள் வாழ்க்கை யையே, அகம் புறம் என்னும் இருவகையால் நுட்பமாய் ஆராய்ந்தனர் முன்னோர் எனலாம். பண்டைத் தமிழர் கடவுள் வழிபாட்டிலும் வீடுபேற்று முயற்சியிலும் சிறந்திருந்தமையின்,