பக்கம் எண் :

முன்னுரை 19

அதில் பிராமணனுக்குக் கூறப்படும் உயர்வும், பொருள் வசதியும், சூத்திரனுக்குக் கூறப்படும் இழிவும் ஆக்கத்தடை யும் மிக மிக வரையிறந்தன. அறிவுடையோர் அதனை நீதி நூல் என்றும், தரும சாத்திரமென்றும் கூற நாணுவர். அப் பெயர்களை மங்கல வழக்காக அல்லது எதிர்மறையிலக்கணை யாகக் கொண்டாலன்றி, அந்நூலுக்கு எள்ளளவும் பொருந்தா.

தமிழ் அறநூல்களான நாலடியாரும் திருக்குறளுமோ, ஆங்கில முறைமை போல, எல்லாக் குலத்தார்க்கும் ஒப்ப முறைகூறும். இதனாலேயே,

“வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி”

என்று கூறிப்போந்தார் சுந்தரம் பிள்ளையும்.

கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில், திருவாரூரில், தலை சிறந்து நேர்மையாக ஆண்டதினால், மனுநீதிச் சோழன் என்று புகழப்பெற்ற ஒரு சோழமன்னன் இருந்தான். அவனது ஆட்சி முறையை மனுநீதியென்று தமிழ் மக்கள் புகழ்ந்தார் களேயொழிய, அம் முறை எத்தகையதென்று அவர் களுக்குத் தெரியாது; அவ்வரசனுக்குந் தெரியாது. ஒருநாள் அரசன் தன் மகன் செய்த குற்றத்திற்குரிய தண்டனையை, மனுதரும நூலினின்றும் எடுத்துக்கூறுமாறு சில பார்ப்பனரை யேவ, அவர்கள் அதினின்றும் கூறினது அவனுக்கு உடன் பாடில்லை. ஆகையால் அவன் தன் சொந்த முறைப்படியே தன் மகனைத் தண்டித்தான்.

(5) மதம் : தற்காலத்தில் ஆரியமதமும் தமிழமதமும் ஒன்றேயென்னுமாறு கலந்திருந்தாலும், ஆரியருக்கே சிறப் பாகவுரிய தெய்வங்களைப் பிரித்துக் கூறலாம்.

இரு மருத்துவர், எண்வசுக்கள், பதினோருருத்திரர், பன்னீராதித்தர் என நால்வகையான முப்பத்து மூன்று தேவரும், இவரைத் தலைமையாகக் கொண்டவர் முப்பத்து முக்கோடி தேவர் என்பதும், தியாவுஸ், பிருதுவி, மித்திரன், அதிதி, ஆரிய மான், சோமம், பர்ஜன்யா, உஷா, சவித்தார், பிரமா முதலிய வேதகாலத் தெய்வங்களும் ஆரியருடையன. (அக்கினி, இந்திரன், வருணன், விஷ்ணு, ருத்திரன், சரஸ்வதி என்னுந் தெய்வங்கள் பின்னர் விளக்கப்படும்.)