பாடாண் பொருளீடுகள் (Euology and Doxology) உலா, கொற்றவள்ளை, இயன்மொழி வாழ்த்து, நால் வகை யாற்றுப்படை, கடவுள் வாழ்த்து முதலியன. வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ (Didactic.) புறநிலை வாழ்த்து (Benedictory.) செய்யுளின் எழுநிலம் (Bases of Poetical Composition) பாட்டு (Poem or Lyric), உரை (Prose), நூல் (Grammar and Science), வாய்மொழி (Scripture), பிசி (Riddle), அங்கதம் (Satire and Imprecation), முதுசொல் (Proverb) என்பன. இவற்றுள், உரை பாட்டிடை வைத்த குறிப்பு (Prose interposed in poetry), பாவின்றெழுந்த கிளவி (Commentary), பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி (Fable), பொருளொடு புணர்ந்த நகைமொழி (Wits and Humour) என நால் வகைப்படும். நூல்வகை (Different Kinds of Poems) பண்ணத்தி - பாட்டும் உரையும் கலந்த ஒருவகை நூல். எண் வனப்பு அம்மை (Sonnet), அழகு (Poem with proper diction), தொன்மை (Legend in mixed prose & verse), தோல் (Epic), விருந்து (Novel Composition), இயைபு (Epic whose sections end in any of the nasals or liquids), புலன் (Dramatic), இழைபு (Lyrical) என்பன. மறைநூல் (Scripture) ஒவ்வொரு நாட்டிலும் முதலாவது தோன்றக்கூடிய சிறந்த நூல் மறைநூலாகும். அதனால் அதன் பெயர் அறிவு அல்லது புத்தகம் என்று பொருள்படுவதாயிருந்து, பிற்காலத்தில் பிற நூல்களுக்கும் கலைகளுக்கும் பொதுப் பெயராவதுண்டு. ஆங்கிலத்தில் கிறித்தவ மறைநூலுக்கு Bible என்று பெயர். இது புத்தகம் என்று பொருள்படும் biblos என்னும் கிரேக்கச் சொல்லினின்றும் பிறந்தது. Bible என்னும் சொல் இன்றும் புத்தகம் என்று பொருள் படுவதை, bibliography, bibliomania முதலிய சொற்களா லறியலாம்.
|