Scripture என்பதும் முதலாவது எழுத்து (எழுதப்பட்ட நூல்) என்றே பொருள்படும். Script - எழுத்து. வடமொழியில் வேதமே முதலாவது நூல். வேதம் என்னும் பெயர், 'வித்' (அறி) என்னும் வேரினின்று பிறந்து, அறிவு என்று பொருள்படுவதொரு சொல். பிற்காலத்தில் ஆயுர்வேதம், காந்தருவ வேதம், தனுர்வேதம் என்று பிற கலைகட்கும் வேதம் என்னும் சொல் பொதுப்பெயராயிற்று. இங்ஙனமே தமிழிலும் முதலாவதெழுந்த நூல் மறை நூலாகும். மறை என்னும் சொல் மறைவான (Esoteric) பொருளுள்ளது என்று பொருள்படுவது. பின்பு அது பிற கலைகட்கும் பொதுப் பெயரானதை, “நரம்பின் மறை” என்றும், “காமப் புணர்ச்சியும்.... மறையென மொழிதல் மறையோர் ஆறே”1 என்றும், முறையே, இசைநூலையும் இலக்கண நூலையும் குறிக்க அச் சொல்லைத் தொல்காப் பியர் வழங்கியதினின் றறியலாம். தமிழர்க்குத் தனிமறையிருந்த தென்பது, தொல்காப் பியச் செய்யுளியலில், “பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே” | (75) |
“மறைமொழி கிளந்த மந்திரத் தான” | (158) |
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” | (171) |
என்று கூறியிருப்பதா லறியப்படும். மறைநூ லிலக்கணம் தொல்காப்பியர் கூறியபடியே திருவள்ளுவரும் கூறுகின்றார். “நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்” | (குறள். 28) |
நக்கீரர் பாடிய “முரணில் பொதியில்” என்னும் செய்யுளை மந்திரமன்றென்றும் அங்கதப் பாட்டென்றும் பேராசிரியர் கூறியிருப்பதாலும், 'நீத்தார் பெருமை' என்னும் அதிகாரத்தில் முனிவர் சாவிப்பைத் தனியாய், “குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது” | (குறள். 29) |
1. தொல் செய். 178.
|