என்னும் திருமந்திரங்களான் உணர்க. இதன் விளக்கத்தைத் திருவாளர் சி.எஸ். சுந்தர முதலியார் எழுதிய 'திருமந்திர உபதேசப் பகுதியுரையிற் கண்டுகொள்'. (பக். 52-4). சிவம் அல்லது சேயோன் (முருகன்) என்பது பண்டைத் தமிழ்த்தெய்வம் என்பதும், ஆரிய வேதங்களி லுள்ள ருத்திரன் என்னும் தெய்வமும் தமிழர் தெய்வமாகிய சிவம் என்பதும் வேறு என்பதும் பின்னர்க் காட்டப்படும். 'சிவாய நம' என்னும் திருவைந்தெழுத்தில் 'சிவ' என்னும் ஈரெழுத்துகளே தமிழர்க்குரியன. 'ஆய' என்னும் நான்காம் வேற்றுமையுருபும், 'நம' என்னும் வணக்கங்குறித்த சொல்லும், வடமொழியாகும். தமிழர்க்குத் திருவைந்தெழுத் திருந்திருப்பின், அது 'சிவபோற்றி' என்பது போன்றிருக்குமே யன்றிச் 'சிவாய நம' வென்றிருக்கவே யிருக்காது. ஆரியர் தமிழ மதத்தலைவரான பிற்காலத்தில், வடமொழி தேவ மொழி யெனப்பட்டு, தமிழிற் புகுந்த ஒவ்வொரு வடசொல் லும் வடவெழுத்தும் தெய்வத்தன்மை யேற்றிக் கூறப்பட்டது. சரித்திரமும் மொழிநூலுமறியாத தமிழர்க்கு இன்றும் நான் சொல்வது விளங்காதென்றே நினைக்கின்றேன். ஆங்கிலவறி ஞரும் சூழ்ச்சியப்புலவரு(Engineer)மான மாணிக்க நாயகரே மயங்கின ரென்றால் பிறரை யென்சொல்வது? மூச்சுகள் இரண்டேயாதலும், சிவ என்னும் சொல் ஈரெழுத்துச் சொல் லேயாதலும் அதனால் வளிநிலை அஞ்செழுத்தெண்ண லாகாமையும் அறிந்துகொள்க. “எல்லா வெழுத்தும்” என்னும் தொல்காப்பிய நூற் பாவில், “உறழ்ச்சி வாரத் தகத்தெழு வளியிசை அரில்தப நாடி அளபிற் கோடல்” என்பதைச் 'சிவ' என்னும் திருவிரண் டெழுத்துப் போன்ற வொலிகளைத் தவத்தோர் ஒலித்தலா கவே கொள்ள வேண்டும் என்க. தொல்காப்பியப் பாயிரத்தில், “நான்மறை முற்றிய அதங்கோட்டாசாற்கு” என்னும் பகுதியில், நான்மறையென் றது தமிழ் மறையையே. நான்மறையென்பது, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளும் பயக்கும் மறையை. ஏலாதியென் னும் கீழ்க்கணக்கு நூற் கடவுள் வாழ்ந்துச் செய்யுளிலுள்ள 'நான்மறை' என்னுந்
|