முன்னர்க் குறிக்கப்பட்டது. இது ஒரு தாய்வீட்டிலுள்ள வழங்காத கலங்களையெல்லாம் மக்கள் கொண்டுபோய் வழங்குதல் போன்றது. தமிழிலுள்ள நோட்டம் என்னும் தொழிற்பெயரின் வேரான நோடு என்பது, கன்னடத்தில் வழங்குதல் காண்க. துல்லிபம், துலை, துலைநா, துலா, துலாம், துலான், துலாக்கோல், கைத்துலா, ஆளேறுந்துலா என்று இருவழக்கி லும், துலை என்னும் சொல்லும் அதன் பிற வடிவங்களும் தொன்று தொட்டுத் தமிழ்நாட்டில் வழங்கிவருகின்றன. இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின் பனி என்னும் அறுவகைப் பருவங்களையும், முறையே, வசந்தம் கிரீஷ்மம், வர்ஷம், சரத், ஹேமந்தம், சிசிரம் என்று மொழி பெயர்த்துக் கொண்டனர் ஆரியர். வசந்தம் (Spring), கோடை (Summer), வறளை (Autumn), மாரி (Winter) என்னும் நால்வகைப் பருவங்கள்தாம் ஆரியநாடு என்னும் வடநாட்டிற்கேற்கும். இளவேனில் முதலிய அறுவகைப் பருவங்கள் தமிழ்நாட்டிற்கேயுரியன. இதனால், மூலம் எவை யென்றும் மொழிபெயர்ப்பு எவையென்றும் அறிந்து கொள்ளலாம். இங்ஙனமே ஆரிய மொழி பெயர்ப்புகள் சிலவிடங்களில் மறைந்திருப்பினும் சிலவிடங்களில் வெளியாய்விடுமென்க. “நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமும்” என்று தொல் காப்பியத்தில்(புறத். 30) கூறியிருப்பதால், குறிநூலும் (Astrology) தொல்காப்பியர் காலத்திலிருந்தமை யறியப்படும். வானநூலறிஞனுக்குத் தமிழில் கணியன் என்று பெயர். கணியன் காலத்தைக் கணிப்பவன். பண்டைத் தமிழ்நாட்டில் வள்ளுவரே பெரும்பாலும் கணியராயிருந்தனர். தமிழர் கணிதத்தில் வல்லவராயிருந்ததினால் வானநூலிலும் வல்லவ ராயிருந்தனர். இப்போது வழங்கும் 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாக னன் என்பவனால், அல்லது கனிஷ்கனால்1 கி.பி. 78-இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டரசனால் ஏற்பட்டவை யாதலின் வடமொழிப் பெயர்களாயுள்ளன. 60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதினாலும், மிகக் குறுகியதினாலும், சரித்திர நூற்குப்
1. The Hindu, March 10, 1940, p. 7.
|