பக்கம் எண் :

226ஒப்பியன் மொழிநூல்

பயன்படாது. ருத்ரோத்காரி என்று கூறினால், எந்த ருத்ரோத் காரி யென்று அறியப்படாமையால், இவ்வளவின்மைபற்றித் தமிழுக்கொரு குறையுமில்லையென்க.

சொல்லியல் நூல் (Etymology)

தொல்காப்பியத்தில்,

“எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே”

(பெயர. 1.)

“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்
றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே”

(எச்ச. 1)

“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி”

(எச்ச. 4)

“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”

(எச்ச. 5)

என்றும், அறுவகைத் திரிபுகளும் (எச். 7), மூவகைக் குறைக ளும் (எச்ச. 57) வினை பயன் மெய் உரு என்ற நால்வகை யுவமங்கட்கு வெவ்வே றுருபுகளும் (உவ. 12-6) கூறியிருப்ப தாலும், பிறவற்றாலும், பண்டைத் தமிழர்க்குச் சொல்லிய லுணர்ச்சியிருந்தமை யறியப்படும். மொழிநூற்கு முற்படி யானது சொல்லியலே. ஒரு மொழிபற்றியது சொல்லியலும் பல மொழிபற்றியது மொழிநூலுமாகு மென்றறிக.

தருக்கநூல் (Logic)

தருக்குதல் ஒருவன் தன்னை மிகுத்துக்காட்டுதல். “தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து” என்று தொல்காப்பியத்திலேயே (அகத். 53) வந்திருத்தல் காண்க. தருக்கு - செருக்கு. த-ச, அ-எ, போலிகள். (ஒ.நோ : ஓதை - ஓசை, சத்தான் - செத்தான்.)

தருக்கு + அம் = தருக்கம். தருக்கத்திற்கு ஏரணம் என்றும் பெயருண்டு. ஏர் + அணம் = ஏரணம். ஏரணம் எழுச்சி. தருக்கம் என்னும் தென்சொல்லையே, தர்க்கம் என்று எழுதி வடசொல்லாகக் காட்டுவர் ஆரியர்.

தருக்கம் என்பது ஒரு சொற்போர். ஒருவன் தன் கொள்கையை நாட்டி எதிரியை வெல்வதே தருக்கம். வெல்வதெல்லாம் வாகை. வாகைப் பொதுவிலக்கணமாவது,