பக்கம் எண் :

236ஒப்பியன் மொழிநூல்

வாணிகம் முதலாவது உள்நாட்டு வணிகம் அயல்நாட்டு வணிகம் என இருதிறப்படும். அவற்றுள் அயல்நாட்டு வணி கமே சிறந்தது. அதுவும் நிலவாணிகம் நீர்வாணிகம் என இருதிறப்படும். அவற்றுள் நீர்வாணிகமே சிறந்தது.

தமிழர் பண்டைக்காலத்தில் நீர்வாணிகத்திற் சிறந்திருந் தமைக்கு அகச்சான்றும் புறச்சான்றும் நிரம்பவுள.

கிறித்துவுக்கு 3000 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்ட தான ஊர் என்னும் கல்தேயநகர் அகழ்வில், இந்தியத் தேக்கு மரத்துண்டு கண்டுபிடிக்கப்பட்டதென்றும், தேக்கு மரம் இந்தியாவில் விந்தியமலைக்கு வடக்கே வளர்வதே யில்லையென்றும், மஸ்லினுக்குப் பாபிலோனிய பழம்பெயர் சிந்துவென்றும், அது இந்தியாவினின்றும் ஏற்றுமதியானதி னால் அப் பெயர் பெற்ற தென்றும் ராகொஸின் கூறுகிறார்.1

“எகிபதியக் கல்லறைகளில் நீலமும் (indigo), மஸ்லினும் கண்டது, இந்திய விளைபொருள்கள் குறைந்தது கிறித்து வுக்கு 1700 ஆண்டுகட்கு முற்பட்ட பழைமையில் எகிப்திற் குள் புகுந்தமையைத் திட்டமாய்க் காட்டிவிட்டது. சுமேரியர் இந்தியாவிற்கேயுரிய பொருள்களாகிய தேக்கு, மஸ்லின் வணிகம் செய்தார்கள் என்பதற்கும் சான்றுளது” என்று திருவாளர் ஏ. கோஸ் (Ghose) ஒரு கட்டுரையிற் கூறுகின்றார்.2

கிறித்துவுக்கு 1000 ஆண்டுகட்கு முன்னிருந்த சாலோமோனுக்கு முந்திய சான்றுகளிருப்பதால், அவன் இந்தியாவோடு செய்த வாணிகத்தின் வாயிலாய், எபிரேய மறைக்குள் புகுந்த துகி (தோகை = மயில்), கபி (கப்பி = குரங்கு) என்னும் தமிழ்ச்சொற்கள், தமிழ்நாடு மேனாட்டொடு பண்டு செய்துவந்த வணிகத்திற்குச் சிறப்புடைச் சான்றாகா.

“முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை” என்று தொல் காப்பியத்திற் (அகத். 37) கூறியிருப்பதால், கி.மு. 2000 ஆண்டுகட்கு முன்பே, தமிழர் வாரித்துறையிற் சிறந்திருந் தமையறியப்படும்.

தமிழில் பலவகை மரக்கலங்கட்கும் பெயருள்ளன. அவை புணை, பரிசல், கட்டுமரம், தோணி, திமில், ஓடம், படகு, அம்பி, வங்கம், கப்பல், நாவாய் முதலியன.


1. Vedic India, pp. 305, 306.

2. The madras Mail dated 2nd Dec. 1915.