அரசனிடம் அமைச்சனாயிருந்தமைபற்றி, மந்திரி என்னும் பட்டப்பெயர் வழங்கி வருகின்றது. இங்ஙனமே ஐயர் என்னும் பெயரும் பார்ப்பனருக்கு வழங்குவதாகும். ஐயன் என்னும் தனித் தமிழ்ப்பெயரை ஆரியன் என்னும் ஆரியப் பெயரின் சிதைவாகச் சிலர் கூறுகின்றனர். ஆரியன் என்னும் பெயருக்கு வணங்கப்படத்தக்கவன் என்று ஆரியர் பொருள் எழுதிவைத்திருப்பதினாலும், தமிழ் நாட்டிற் பிற் காலத்தில் ஆரியர்க்குத் தலைமையேற்பட்டதி னாலும், ஆரியன் என்னும் பெயர் ஐயன் என்னும் பெயர் போல, பெரியோன் என்னுங் கருத்தில் ஆசிரியன், ஆசாரியன் முதலியோரைக் குறித்ததேயன்றி வேறன்று. 'ஆரியற் காக வேகி' என்று கம்பரும், இடைச்சுரத்துக் கண்டோர் கூற்றாக “யார்கொல் அளியர் தாமே யாரியர்” என்று (குறுந். 7) பெரும்பதுமனாரும், முறையே, வணங்கப் படத்தக்கவன், பெற்றோர் என்னும் பொருளில் ஆரியன் என்னும் பெயரை வழங்கியிருப்பது, வடநூற் கருத்துப்பற்றிய அருகிய நூல்வழக்கேயன்றி, ஐயன் என்னும் பெயர்போலப் பெருவாரியான தமிழ்நாட்டுலக வழக்கன்று. ஐயன் என்னும் பெயர் ஆரியன் என்னும் பெயரின் சிதைவாயின் இவ் வொரே பெயரைத் தந்தை பெயராகக் கொண்ட பறையர் ஆரியராதல் வேண்டும். தனித் தமிழரும் பார்ப்பார்க்கு மிகச் சேயவருமான பறையர் அங்ஙனமாகா மையின், 'ஐயன்' என்னும் சொல் 'ஆரியன்' என்னும் சொல்லின் சிதைவன்று. 'Ar' (to plough) என்பதை ஆரியன் என்னும் பெயருக்கு வேராகக் கொள்வர் மாக்சுமுல்லர். அந்தணன் என்னும் பெயரும் ஐயன் என்னும் பெயர் போன்றே பார்ப்பனருக்கு அமைந்ததாகும். ஆனால், இன்னும் நூல் வழக்காகவே யுள்ளது. அந்தணன் என்பதை அந்தம்+அணன் என்று பிரித்து, மறை முடிபு(வேதாந்தம்)களைப் பொருந்துகின்றவர் என்று பொருளுரைப்பர் வடமொழிவழியர்; அம்+தண்மை+அன் என்று பிரித்து அழகிய குளிர்ந்த அருளையுடையவர் என்று பொரு
|