பக்கம் எண் :

முன்னுரை 39

அதே சமையத்தில், அது அவர்க்கு விலக்கப்பட வில்லை என்றும் அறியலாம்.

தமிழ்நாட்டிற்கு முதன்முதல் வந்த ஒருசில ஆரியப் பிராமணர், தமிழ அந்தணர் போலத் துறவிகளாகத் தோன்றி யமையால் அந்தணரோடு சேர்த்தெண்ணப்பட்டார். இதை,

“நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய”

(தொல். 160)

என்பதால் அறியலாம்.1 இந் நூற்பாவிற் குறிக்கப்பட்ட நூல் முதலிய நான்கும் ஆரியர்க்கேயுரியன. தமிழ முனிவர் உயர்ந்த நிலையினராதலின் இத்தகைய பொருள்களைத் தாங்கார்.

“மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை”

(குறள். 245)

ஆரியருள், முனிவர் போன்றவர் அந்தணர் என்றும், பிறரெல்லாம் பார்ப்பாரென்றுங் கூறப்பட்டனர். ஆரிய முனி வரை, வீரமாமுனிவர் (Beschi), தத்துவபோதக சுவாமி (Robert de Nobili) என்னும் மேனாட்டாருடன் ஒப்பிடுக.

தொல்காப்பியத்தில், பார்ப்பார் அந்தணரினின்றும் வேறாகவே கூறப்படுகின்றனர். அவர்க்கு அந்தணர் என்னும் பெயர் எங்கும் கூறப்படவில்லை. இதனால், ஆரியருட் பெரும்பாலார் அந்தணராகக் கொள்ளப்படவில்லையென் பதையறியலாம். பிறப்பால் மட்டும் பிராமணனாயுள்ளவன் பார்ப்பான் என்றும், தொழிலாலும் பிராமணனாயுள்ளவன் அந்தணன் என்றும் குறிக்கப்பட்டதாகச் சிலர் கொள்கின்றனர்.2 'அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்' என்று தொல் காப்பியத்திலும், வேளாப்


1. ஆயுங்காலை என்றதனால், குடையுஞ் செருப்பும் முதலானவும் ஒப்பன அறிந்துகொள்க.

(உ - ம்) :

“எறிந்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ
லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும்”

(கலித். 4)

......இன்னும் ஆயுங்காலை என்றதனான். ஓருகோலுடையார் இரு வருளர். அவர் துறவறத்து நின்றாராகலின் உலகியலின் ஆராயப் படாரென்பது முக்கோலுடையார் இருவருட் பிச்சை கொள்வானும், பிறாண்டிருந்து தனதுண்பானும் உலகியலின் நீங்காமையின் அவரையே வரைந்தோதினானென்பது” (தொல். 610, பேரா. உரை)

2. தொல். பொருள். 74.