என்னும் மூன்றையும் திருவள்ளுவர் இல்லறத்திற் கூறாது துறவறத்திற் கூறினர். பிராமணருக்கு அருளில்லையென்பது, மனுதரும நூலாலும், இப்போது அவர் பிறரை முக்கியமாய்க் கீழோரை நடத்தும் வகையினாலும் அறியப்படும். உணவுக்கு வழியற்றவரையும், ஒழுக்கங் குன்றியவரையுங்கூடக் கூசாமல் முனிவரென்று கூறுவது ஆரிய வழக்கம். “அஜீகர்ததரென்னும் முனி பசியினால் வருந்தி, சுநச் சேபன் என்னும் தம் மகனை, வேள்வியிற் பலியிடும்படி நூறு ஆவிற்குத் தாமே விற்றார். பசிக்கு மாற்றஞ்செய்த படியால், அதனால் அவருக்குப் பாவம் நேரிடவில்லை” என்று மனுதரும நூல் (10:105) கூறுகின்றது. பிராமணருக்குக் கலியாணத்திற்கு முந்திய நிலை பிரமசரிய மென்று பிரிக்கப்படுவதனாலும், துறவறத்தின் முற் பகுதியான வானப் பிரத்தத்தில் குடும்ப வாழ்க்கை கூறப்படு வதனாலும், பிராமணர் ஊருக்குப் புறம்பாகவிருப்பின், எந்த நிலையிலும் தம்மைத் துறவிகளாகக் கூறிக்கொள்ள இடமுண்டு. தமிழ முனிவரான அந்தணர், சிறந்த அறிஞராயும் ஆசிரியராயும் ஆக்கவழிப்பாற்றலுள்ளவராயும் இருந்த மையின், அரசர்கள் அவர்களை மதியுரைக்கும் தற்காப்பிற் கும் துணைக் கொண்டனர். இதையே, திருவள்ளுவர் திருக்குறட் பொருட் பாலில், 'பெரியாரைத் துணைக்கோடல்', 'பெரியாரைப் பிழையாமை' என்ற அதிகாரங்களிற் கூறுவர். அரசர்கள் போர், வேட்டை முதலியனபற்றிச் சென்றபோது. அவர்கட்குத் துணையாயிருந்த அந்தணரே அரசு செய்யக் கூடும். இதையே “அந்தணாளர்க் கரசுவரை வின்றே” என்னும் நூற்பா குறிப்பதாகும்.1 'வரைவின்றே' என்பது விலக்கப்படவில்லை என்று பொருள்படுமேயன்றி, என்றுமுரியது என்று பொருள் படாது. இரண்டாம் குலோத் துங்கச் சோழனுக்கு ஒட்டக்கூத்தர் அமைச்சராயிருந்து, அவன் மணஞ்செய்த புதிதில் சிறிது காலம் அவனுக்குப் பதிலாய் ஆண்டார். இதனால், அரசுரிமை புலவர்க்கெல்லா முண்டென்று கொள்ளுதல் கூடாது. ஆனால்,
1. இந்நூற்பாவிற்கு, “அரசர் இல்வழி அந்தணரே அவ் வரசியல் பூண்டொழுகலும் வரையப்படாது என்றவாறு” என்று பேராசிரியர் உரை கூறியதுங் காண்க.
|