பக்கம் எண் :

52ஒப்பியன் மொழிநூல்

இங்ஙனம் பார்ப்பனர் உயர்தரக் கல்வியைத் தங்க ளுக்கே வரையறுப்பது, தங்களைப் பிறப்பிலேயே உயர்ந்தவ ராகவும், பிரமாவே தங்களைக் கல்விக்குரியவராகப் படைத்த தாகவும், கல்லாத் தமிழரிடம் காட்டி அவர்களை என்றும் அடிமைப் படுத்தற்கே.

ஆரியத்தால் தமிழ் கெட்டமை

தமிழ் மாது ஆரிய மொழியால் அலங்கரிக்கப் பெற்றிருப்பதாக, மஹாமஹோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள், தங்கள் 'சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்' என்னும் நூலிற் கூறியிருக்கிறார்கள். இது எத்துணை உண்மையென ஆராய வேண்டும்.

வீண் வடசொல்

வடமொழி தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து, தூய்மை யான தென்சொற்களுக்குப் பதிலாக, வீணான வடசொற்கள் மேன் மேலும் வழங்கி வருகின்றன. அவற்றுட் சில வருமாறு:

அங்கவஸ்திரம்-மேலாடை
அசங்கியம்-அருவருப்பு
அன்ன சத்திரம்-உண்டிச் சத்திரம்
அத்தியாவசியம்-இன்றியமையாமை
அந்தரங்கம்-மறைமுகம்
அநேக-பல
அப்பியாசம்-பயிற்சி
அபிவிர்த்தி-மிகுவளர்ச்சி
அபராதம்-குற்றம் (தண்டம்)
அபிஷேகம்-திருமுழுக்கு
அபூர்வம்-அருமை
அமாவாசை-காருவா
அர்ச்சனை-தொழுகை (வழிபாடு)
அர்த்தம்-பொருள்
அவசரம்-விரைவு (பரபரப்பு)
அவசியம்-தேவை
அவயவம்-உறுப்பு
அற்புதம்-புதுமை (இறும்பூது)
அன்னவஸ்திரம்-ஊணுடை
அன்னியம்-அயல்
அனுபவி-நுகர்
அனுஷ்டி-கைக்கொள்
அஸ்திபாரம்-அடிப்படை
ஆக்கினை(ஆணை)-கட்டளை
ஆகாரம்-உணவு
ஆச்சரியம்-வியப்பு
ஆசாரம்-ஒழுக்கம்
ஆசீர்வாதம்-வாழ்த்து
ஆதரி-தாங்கு (அரவணை)
ஆதியோடந்தமாய்-முதலிலிருந்து முடிவுவரை
ஆபத்து-அல்லல்
ஆமோதி-வழிமொழி
ஆரம்பம்-துவக்கம், தொடக்கம்
ஆரோக்கியம்-நலம், நோயின்மை
ஆலோசி-சூழ்