பக்கம் எண் :

மொழிநூல் 79

துரேனிய மொழிகளிற் சீனமொழிந்தவை1 புணர் நிலைக்குச் சிறந்தவையாய்ச் சொல்லப்படும்.

பகுசொன்னிலையாவது, புணர்நிலைச் சொற்களில் ஒன்று குறுகித் தனித்தன்மையிழந்து, சொல்லுறுப்பாய் நிற்பது.

கா : மருமான், வில்லவன் (வில் + அவன்), வில்லான். பகுசொன்னிலைக்கு ஆரியமொழிகள் சிறந்தனவாகக் கூறப்படும்.

தொகுநிலையாவது, புணர்நிலைச்சொற்களின் இடையில், எழுத்துகளும் அசைகளும் தொக்குநிற்பது.

கா : ஆதன் + தந்தை = ஆந்தை; பெரு + மகன் (பெருமான்) - பிரான், அல்லது பெம்மான்.

பல்தொகுநிலையாவது, பன்மொழித் தொடரினிடையே பல அசைகள் அல்லது சொற்கள் தொக்கு நிற்பது.

கா : நச்செள்ளையார் (நல் + செள்ளை + அவர்), சேர சோழ பாண்டியர். அமெரிக்கமொழிகள் பல்தொகுநிலைக்குச் சிறந்தனவாகக் கூறப்படும்.

மெக்சிக (Mexican) மொழியில், 'achichillacachocan' என்னும் பல்தொகுநிலைத்தொடர், 'நீர் சிவந்திருப்பதால் மக்கள் அழும் இடம்' என்று பொருள்படுவதாம். (alt-நீர், chichiltic-சிவந்த, tlacatl-மாந்தன், chorea-அழு)2

பிரிநிலையாவது, பகுசொன்னிலைச் சொற்கள் ஈறிழந்து நிற்பது.

கா : வந்தேன்-வந்து (மலையாளம்); brekan (O.E.) - break (Infinitive).

(2) மூலமொழி (Parent Language), கிளைமொழி (Daughter Language), உடன்மொழி (Sister Language) என மூவகையாக வகுப்பது ஒருமுறை.


1. பின்னியம் (Finnish), ஹங்கேரியம் (Hungarian), துருக்கியம் (Turkish), தமிழ் முதலியன.

2. Historical Outlines of English Accidence, p.2.