திராவிடக் குடும்பத்தில், தமிழ் மூலமொழி; தெலுங்கு, கன்னடம் (கருநடம்), மலையாளம் முதலியவை தமிழுக்குக் கிளைமொழியும், தம்முள் ஒன்றோடொன்று உடன்மொழியு மாகும். நீலமலையிலுள்ள படகம் (படகர்மொழி) கன்னடத் தின் கிளைமொழி. (3) இயன்மொழி (Primitive Language), திரிமொழி (Derivative Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை. இவற்றுக்குத் தமிழையும் பிற திராவிட மொழிகளையும் முறையே காட்டாகக் கொள்க. (4) இயற்கைமொழி (Natural Language), செயற்கை மொழி (Artificial Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை. தமிழ் ஓர் இயற்கைமொழி. உவில்க்கின்ஸ் கண் காணியார் (Bishop Wilkins) எழுதிய கற்பனை மொழி ('A Real Character and a Philosophical Language') செயற்கை மொழிக்குக் காட்டாகும்1 காங்கிரஸ் தலைவர்கள் உருதுவிற்கும் இந்திக்கும் இடைத்தரமாக, இந்துஸ்தானி என ஒன்றை அமைப்பதாகச் சொல்வது அரைச் செயற்கைக் கலவை மொழியாகும். (5) தனிமொழி (Independent Language), சார்மொழி (Dependent Language), கலவைமொழி (Composite or Mixed Language) என மூவகையாக வகுப்பது ஒருமுறை. இவை மூன்றுக்கும், முறையே, தமிழையும் பிற திராவிட மொழிகளையும், ஆங்கிலத்தையும் காட்டாகக் கூறலாம். (6) முதுமொழி (Ancient Language), புதுமொழி (New Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை. இவற்றுக்குத் தமிழும் இந்தியும் காட்டாகும். (7) இலக்கியமொழி (Classical Language), வறுமொழி (Poor Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை. இவற்றுக்குத் தமிழையும் குடகையும் காட்டாகக் கூறலாம்.
1. L.S.L. Vol. II, p.p. 50-63.
|