(3) கொண்முடிபுநிலை (Theoretical Stage) என முந்நிலைப்படும். அங்ஙனமே மொழிநூற்கலையும். மொழி நூற்கலையில் ஆய்வுநிலையாவது, மொழிகளைத் தனித்தனி ஆராய்தல்; பாகுபாட்டுநிலையாவது, தனித்தனி ஆராய்ந்த மொழிகளைச் சொற்களிலும் இலக்கணத்திலும் உள்ள ஒப்புமை பற்றி, பல குடும்பங்களாகவும் அக் குடும்பங்களைப் பல குலங்களாகவும் வகுத்தல்; கொண் முடிபு நிலையாவது, ஒரு குடும்ப மொழிகட்குள்ளும், பல குடும்பங்கட்குள்ளும், பல குலங்கட்குள்ளும் உள்ள தொடர் பையும், அவற்றின் நிலைகளையும், ஒலிநூல் (Phonology), உளநூல் (Psychology) முதலிய கலைகளையும் துணைக் கொண்டு, எல்லா மொழிகட்கும் பொதுவும் அடிப்படையு மான ஒரு மூலமொழியைக் கண்டுபிடித்தற்கான விதிகளை யறிந்து, அதைக் கண்டுபிடித்தல். இக் கொண்முடிபு நிலை யும் (1) ஆராய்ச்சி, (2) முடிவு என இருநிலைப்படும். உலகில், மொழிநூற்கலை முதலிரு நிலைகளையுங் கடந்து, இதுபோது மூன்றாம் நிலையில் ஆராய்ச்சிநிலைமை யிலுள்ளது. 4. மொழிநூல் நெறிமுறைகள் - Principles of Comparative Philology மொழிநூலானது, ஒரு சிறந்த தனிக் கலையானாலும், அதன் நெறிமுறையறியாத சிலருடைய வழூஉக் கூற்றுகளால், பொதுவாய் மிகவும் பழிக்கப்படுகின்றது. மொழி நூல் நெறிமுறைகளாவன 1. மொழிநூல் ஒரு தனிக்கலை பலர் மொழிநூல் ஒரு தனிக்கலை யென்பதை இன்னும் அறிந்திலர். பண்டிதர்கள் பொதுவாய்த் தங்களிடம் யாரே னும் ஒரு சொல்லுக்கு மூலங்கேட்டால், அதற்கு ஏதாவது சொல்லாதிருப்பின் இழிவென்றெண்ணி, 'பொருந்தப் புளுகல்' என்னும் உத்திபற்றி ஏதேனுமொன்றைச் சொல்லி விடுகின்றனர். பாண்டித்தியம் வேறு, மொழிநூற் புலமை வேறு என்பதை அவர் அறிந்திலர். காலஞ்சென்ற ஒரு பெருந் தமிழ்ப்பண்டிதர், திருச்சிராப் பள்ளியில் ஒருமுறை 'வடை' என்னும் தின்பண்டப் பெயர், 'வடு' என்னும் மூலத்தினின்றும் பிறந்ததென்றும், அப் பண்டத் தின் நடுவில் துளையிருப்பது அதற்கொரு வடு (குற்றம்) வென்றும்
|