பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 5

1

1. தமிழ் வணக்கம்

'கஜமுகவதனா' என்ற மெட்டு

பல்லவி

 
   
   அருந்தமி ழனையே! அரவணை யெனையே  
   திருந்தறி வினையே தினமருள் துணையே.  
   

சரணம்

 
   
   மருந்துறழ் மானே! மகிழ்தரு தேனே!  
   மலர்புரை யுனதடி மனந்தொழு தேனே

(அருந்)

2. தமிழ்த்தாய்

எமுனாகல்யாணி - ஆதி

   தாயினுஞ் சிறந்தது தமிழே தரணியி லுயர்ந்தது தமிழே
   வாயுடன் பிறந்தது தமிழே வாழ்வெல்லாந் தொடர்வது தமிழே.
 
   பாலூட்டி வளர்த்ததும் தமிழே தாலாட்டி வளர்த்ததும் தமிழே
   பாராட்டி வளர்த்ததும் தமிழே சீராட்டி வளர்த்ததும் தமிழே
 
   தேம்படு மழலையுந் தமிழே திருந்திய வுரைகளும் தமிழே
   தேம்பி யழுததுந் தமிழே தேவையைக் கேட்டதும் தமிழே
 
   முந்தி நினைந்தலும் தமிழே முந்தி மொழிந்ததும் தமிழே
   குந்தி யெழுந்ததும் தமிழே குலவி மகிழ்ந்ததுந் தமிழே
 
   பயன்படு கல்வியும் தமிழே பணிபெறப் படுவதும் தமிழே
   அயன்மொழி பயில்வதும் தமிழே அயன்மொழி நினைவதும் தமிழே