இன்றும் நூல்வழக்கி லில்லாவிடினும் செயல்வழக்கிற் பல கலைகளுள்ளன. அவற்றுள் ஒன்று சிற்பம், சிற்பக் கலைக்குரிய அக்கிரபட்டியல், பலகை, முனை, இதழ், குடம், தாடி, கால், நாகபந்தம், போதிகை, யாளம், கூடு, நாணுதல், மதலை, பூமுனை, கொடி, சாலை, கும்பம், பீடம், மண்டபம், கோபுரம், கொடுங்கை, சுருள்யாளி, தூண், பட்டம், அளவு, உத்திரம், முட்டி பந்தம், கொடிவளை, ஆளாங்கு, அணி வெட்டிக்கால், கோமுகம் முதலிய குறியீடுகள் இன்றும் தமிழாயுள்ளன.1 பிற குறியீடுகளும் தற்போது வடசொல்லா யிருப்பினும், தமிழினின்றும் மொழிபெயர்க்கப் பட்டவையே. இன்றும் தமிழ்நாட்டிற் கட்டடத் தொழில் தமிழராலேயே செய்யப்படுவதும் பார்ப்பனராற் செய்யப்படாமையுங் காண்க. (4) இலக்கணம் வரவரப் பிறழ்தல் தொல்காப்பியர் காலத்திலேயே நூலில் இலக்கணப் பிழைகள் தோன்றினமை முன்னர்க் கூறப்பட்டது. அதோடு வழக்கிலும் பல வழூஉ முடிபுகள் பிற்காலத்தில் தோன்றியுள்ளன. அல்ல என்னும் படர்க்கைப் பலவின்பால் எதிர்மறைக் குறிப்பு வினைமுற்றே, ஏனை எண்ணிடங்கட்கும் வழங்கி வருதல் காண்க. (5) சொற்கள் வரவரப் பொருளிழத்தல் தலைக்கழகத்திற்குப் பின், ஒருபொருட் பலசொற்களைப் புலவர்கள் பெரும்பாலும் திட்டமில்லாது வழங்கி வந்திருக்கின்றனர். ஈ, தா, கொடு என்பன, முறையே இழிந்தோன் ஒத்தோன் உயர்ந்தோன் சொற்களாகும். இவை பிற்காலத்தில் வேறுபாடின்றி வழங்கப்பட்டுள்ளன. (6) தமிழ் வரவரத் தூய்மைகெடல் தொல்காப்பியம் முழுமையிலும், ஐந்தாறே வட சொற்கள் உள்ளன. பிற்காலத்தில் அவை வரவரப் பெருகி னமையை, முறையே, கடைக்கழக நூல்கள், திருவாசகம், கம்பராமாயணம், வில்லிபுத்தூராழ்வார் பாரதம் முதலிய வற்றை நோக்கிக் காண்க.
1. Dravidian Architecture, pp. 10-23
|