அகத்தியத்திற்கும் வடமொழி யிலக்கணங் கட்கும் எட்டுணையும் இயைபின் றென்க. “ஆயுங் குணத்தவ லோகிதன் பக்க லகத்தியன்கேட் டேயும் புவனிக் கியம்பிய தண்டமி ழீங்குரைக்க” என்று புத்தமித்திரன் கூறியது, தமிழ்நாட்டிற் பௌத்தத்தைச் சிறப்பித்தற்குக் கூறிய புனைந்துரையே யாகும். தமிழிலக்கியத்தின் உச்சநிலைக் காலம் (The Augustan Age of Tamil Literature) தமிழிலக்கியத்தின் உச்சநிலைக்காலம் தலைக்கழகக் காலமே யென்பதற்குக் காரணங்கள் : (1) தமிழ்ப் பயிற்சி வரவரக் குறைதல் தலைக்கழகக் காலத்தில், தமிழ் முத்தமிழாயிருந்து, பின்பு இடைக்கழகக் காலத்தில் வெவ்வேறாய்ப் பிரிந்தது. கடைக்கழகக் காலத்தில் இசை நாடக நூல்களிருந்தும் புலவராற் பெரும்பாலும், பயிலப்படவில்லை. இதுபோதோ, இசை நாடக நூல்கள் இல்லாமையுடன், இயற்றமிழும் சரியாய்க் கற்கப்படவில்லை, இயற்றமிழ்ப் பகுதிகளில் முக்கியமான பொருளிலக்கணம் தெரிந்த புலவர் இதுபோது மிகச் சிலரேயாவர். (2) முக்கழகங்களும் முறையே ஒடுங்கல் முக்கழகங்களும் காலத்தினாலன்றித் தன்மையினாலும் தலையிடை கடையாயினமை, கீழ்க்காணும் குறிப்பால் விளங்கும். | தலை | இடை | கடை | உறுப்பினர் தொகை | 549 | 59 | 49 | பாடினார் தொகை | 4449 | 3700 | 449 | கழகமிருந்த ஆண்டுத்தொகை | 4440 | 3790 | 1850 | இரீயினார் தொகை | 89 | 59 | 49 | அரங்கேறிய அரசர் தொகை | 7 | 5 | 3 |
(3) கலைகள் வரவர மறைதல் தலைக்கழகக் காலத்தில் எத்துணையோ கலைகள் தமிழிலிருந்தன. அவை ஒவ்வொன்றாய் மறைந்துபோயின.
|