ஆறு = வழி, ஒழுக்கநெறி, சமயம். மார்க்கம் என்னும் வடசொல் இப் பொருளதாதல் காண்க. ஐந்திணை வழிபாடுகளும் இன் (நாஸ்திக) மதமுஞ் சேர்ந்துஆறாகக் கொள்ளப் பட்டிருக்கலாம். அல்லது வேறொரு வகையாய் அறுமதங்கள் எண்ணப்பட்டிருக்கலாம். அறுசமயம் என்னும் தொகை வழக்கு மிகத் தொன்மை வாய்ந்தது. ஏழு: ஏழ் - ஏழு - எழு. பண்ணைக்குறித்த யாழ் என்னும் சொல் ஏழ் என்பதன் திரிபு. யாழ் என்னும் நரம்புக்கருவி தோன்றுமுன்னமே, குறிஞ்சியாழ் பாலையாழ் எனப் பண்ணின் பெயராக யாழ் என்னுஞ்சொல் வழங்கினதினால், யாழ் யாளியின் தலைவடிவைக் கடையிற் கொண்டதென்ற காரணம்பற்றி, அதை யாளி என்னுஞ் சொல்லின் திரிபாகக் கூற முடியாது. யாழின் கடையிலிருப்பது சரியான யாளிவடிவமுமன்று. கருவியிலாயினும் தொண்டையிலாயினும் இசையை யெழுப்புதல் எழூஉதல் எனப்படும். எழுவது அல்லது எழுப்பப்படுவது ஏழ். ஏழ் = இசை. இசைச்சுரங்கள் ஏழு. 'ஏழிசைச் சூழல்', 'ஏழிசை வல்லபி' என்னும் வழக்குகளை நோக்குக. ஏழ் என்னும் இசையின் பெயர், அதன் சுரத் தொகையான ஏழாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டது. எட்டு: எண் + து = எட்டு. எண் = எள். இப் பெயர் ஆகுபெயராய் உணவைக் குறிப்பின், கூலத்தின் தொகைபற்றியதாகும்; எள்ளைக் குறிப்பின், அதன் காயிலுள்ள பக்கங்களின் தொகைபற்றியதாயிருக்கலாம். நெல், புல் (கம்பு), சோளம், வரகு, தினை, சாமை, குதிரைவாலி, காடைக்கண்ணி என்ற எட்டே முதலாவது எண்கூலமென்று கொள்ளப்பட்டவை. கேழ்வரகு வரகின் வகையா யடங்கும். எண் என்னும் உணவுப்பொருள் அல்லது கூலம் எட்டுவகையா யிருத்தலின், அதன் பெயர் எட்டாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டிருக்கலாம். தொண்டு : தொள் + து = தொண்டு. தொள் = தொளை.
|