நீ செய்து | நீ செய்யும் | நீர் செய்து | நீர் செய்யும் |
உம் என்பது எதிர்கால முணர்த்தும் உகரவடிச் சுட்டுச் சொல். ஒ.நோ: “ உம்மை எரிவாய் நிரயம்” . தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே, செய்யும் என்னும் முற்று தன்மை முன்னிலைகளிலும் படர்க்கைப் பலர்பாலிலும் வழக்கற்றுவிட்டது. மலையாளத்தில் இன்றும் வழங்குகின்றது. இறந்தகால வினையெச்சங்களாக இப்போது கூறப்படுபவை, செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென என்பவை. இவற்றுள், ஈற்றது தவிர ஏனையவெல்லாம் தொழிற் பெயராகவே தோன்றுகின்றன. அவற்றை முறையே வீழ்து, முடிபு, உணா, உறூ (உறூஉ) என்பவற்றோடு ஒப்புநோக்குக. செய்து + என = செய்தென = செய்தானென்னும்படி. உறூறு, மரூஉ முதலிய வடிவங்களை நோக்கின், பண்டு சில வினைப்பகுதிகள் ஈற்றுயிர்க்குறில் நீண்டும் தொழிற் பெயரானது போல் தெரிகின்றது. இதுவும் அசையழுத்தம். சென்று, கண்டு, ஓடி, போய் என்னும் வடிவங்களை, குன்று, வண்டு, வெகுளி, பாய் என்னும் தொழிற்பெயர்களுடன் ஒப்புநோக்குக. பின்னவற்றுள் வெகுளியொழிந்தவை தொழிலாகு பெயர்கள். இ-ய். கா : போகி - போய், தாவி - தாய். பிற்காலத்தில் ஐம்பாற் சுட்டுப்பெயர்களான பாலீறுகள் இறந்த கால வினைகளுடன் சேர்க்கப்பட்டன. கா : செய்து + ஆன் = செய்தான் =செய்கையையுடை யவன். சினந்தான் = சினந்த செயலோன். இறந்தகால வினைகள் பாலீறு பெற்றுச் சிறிதுகாலஞ் சென்ற பின், எதிர்கால வினைமுற்றுகளும் பாலீறு பெற்றன. கா : செய்யுமான் - செய்ம்மான் - செய்வான். செய்யுமாள் - செய்ம்மாள் - செய்வாள். செய்யுமார் - செய்ம்மார் - செய்வார். செய்யுமது - செய்ம்மது - செய்வது.
|