(4) ஈற்றுவலி யிரட்டித்த சொல். கா : சிற்று, நாட்டு. (5) முதல் வேற்றுமைப் பெயர். கா : குட்டி, மூங்கில், பொலம். (6) 6ஆம் வேற்றுமைப் பெயர். கா : மரத்து, பதின், பதிற்று. கிழக்கத்திய, பிறம்பத்திய என்பவை 6ஆம் வேற்றுமையடியாய்ப் பிறந்த பலவின்பால் குறிப்பு வினைமுற்று. (7) ஐயீற்றுப்பெயர். கா : பண்டை, அன்றை, கீழை. ஆய - ஐ - ஐ. பண்டாய - பண்டைய - பண்டை. “ பண்டாய நான்மறை” என்னும் திருவாசகத்தொடரை நோக்குக. (8) பெயரெச்சவீற்றுப்பெயர். கா : வட்டமான, அறிவுள்ள. (9) பலவின்பாலீறு பெற்ற பெயர் : கா : பார்ப்பார, வண்ணார. குறிப்பு : பெருநாரை மூங்கிற்குழாய் என்னுந் தொடர்கள் இயல்பாய்த் தோன்றியவை; இடையில் ஒன்றும் தொக்கவையல்ல. அவற்றைப் பெருமையாகிய நாரை, மூங்கிலாகிய குழாய் என்று விரித்துக் கூறியது பிற்காலத்தது. தயிர் குடம் என்னும் இருபொருட் சேர்க்கையைக் கண்டதும், தயிர்க் குடம் என்பரேயன்றித் தயிரையுடைய குடம் என்னார். தயிர் அடையானதினால் முற்கூறப்பட்டது. குடம் அடையாயின் குடத்தயிர் என்று முற்கூறப்படும். அடை வேறுபடுப்பது. வேற்றுமையேயில்லாத ஒரு காலமுமிருந்தது. அக்கால வழக்கையே பிற்காலத்தில் வேற்றுமைத்தொகை யென்றனர். இங்ஙனமே பிற தொகைகளும். இன்றும், பேச்சு வழக்கிலும் குழந்தை பேச்சிலும், ஏன் புத்தகம் நானு கை என்று வழங்குதல் காண்க. வினையெச்சம் (1) தொழிற்பெயர். கா : இன்றி (இல் + தி), இல்லாமை. (2) முதல்வேற்றுமைப்பெயர். கா : வெளி, புறம்.
|