உள் + அது = உள்ளது. உள் + து = உண்டு. இல் + அது = இல்லது. இல் + து = இன்று. உள் + அ = உள்ள - உள. இல் + அ = இல்ல - இல - இலை. இல்ல - இல்லை. ஒ.நோ: அம்ம - அம்மை. செந்தமிழில் ஐகாரவீறாயுள்ள பல சொற்கள், உலக வழக்கிலும் ஏனைத் திராவிட மொழிகளிலும் அகரவீறாகவே வழங்குகின்றன. முன்னது இயல்பான வடிவும் பின்னது பண்படுத்திய வடிவுமாகும். பெயரெச்சம் பெயரெச்சம் பின்வருமாறு பலவகைகளில் உண்டாகும். (1) வினைப்பகுதி. கா : பெரு, சிறு. (2) பலவின்பால் வினைமுற்று. கா : நல்ல, சின்ன, பெரிய, பெயரிய. இய என்னும் ஈற்றில், இகரம் இறந்தகால வினையெச்ச வீறும் அகரம் பலவின்பால் வினைமுற் றீறுமாகும். கா : | இ.கா.வி.எ. | ப.பா.வி.மு. | பெயரெச்சம் | | ஓடி | ஓடிய | ஓடிய |
இறந்தகால வினையெச்சமே முதலாவது முற்றாயிருந்ததென்றும், பின்பு பாலீறு சேர்க்கப்பட்டுத் தற்கால முற்றானதென்றும் முன்னமே கூறப்பட்டதை நினைக்க. கா : செய்து + அ = செய்த (வி.மு.) - செய்த (பெ. எ.). ஓடிய - ஓடின, போகிய - போகின - போயின, போகி - போய் + அ = போய - போன, உறங்கிய - உறங்கின, ஆய - ஆன. ய-ன, போலி. ஒ.நோ: யான் - நான், யமன் (வ.) - நமன். செய்தன (செய்தன் + அ) என்னும் வடிவம், ஆண்பால் வினைமுற்றின்மேல் பலவின்பாலீறு சேர்ந்த அடுக்கீற்று வினையாகும். ஆகவே, உண்மையில் இடைநிலையென்றும் சாரியையென்றும் பகுபதத்தில் ஓருறுப்புமில்லையென்க. (3) ஈறுகெட்டபெயர். கா : வட்ட, மர.
|