மேலேயுள்ள நீர் என்று பொருள்படும் தமிழ்ச்சொல்லே. மே (மேல்) + கம் (நீர்) = மேகம். ஆதாம் (மாந்தன்) என்னும் முதல் எபிரேயப்பெயர் ஆதோம் (சிவப்பு) என்பதின் திரிவாகச் சொல்லப்படுகிறது. ஆதோம் என்பது அரத்தம் (சிவப்பு) என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபாயிருக்கலாம். இந் நூலின் 4ஆம் மடலத்தில், எபிரேயம் எங்ஙனம் தமிழினின்றும் திரிந்ததென்பது விளக்கப்படும். (vii) ஆதியாகமத்திற் படைப்பைப்பற்றிக் கூறுமிடத்தே, வாரம் என்னும் எழுநாளளவைக் கூறியிருத்தல். பகலும் இரவும் சேர்ந்த நாள் என்னும் அளவு முதலிலிருந்துள்ளது. ஆனால், எழுகோள்களைக் கண்டுபிடித்தபின், அவற்றின் பெயரால் உண்டான வாரம் என்னும் அளவு பிற்காலத்தது. மோசே உலக சரித்திர மறிந்தவரல்லர். அவர் அக்காலத்து மக்களின் அறிவுநிலைக்கேற்றபடி, பழைமை முறையிற் படைப்பைப் பற்றிக் கூறினார். இயேசுபெருமான் தாமே திருவாய் மலர்ந்தருளினதே, கிறித்தவர் ஐயமின்றிக் கொள்ளத்தக்கது. கடவுள் நினைத்தவளவில் எல்லாவற்றையும் படைப்பவர். அதற்கு வாய்ச்சொல்லும் ஏழுநாளும் வேண்டியதில்லை. 2. தமிழ் உலக முதற்பெருமொழியா யிருக்கலாமென்பது இதற்குச் சான்றுகளும் காரணங்களும் : (1) தமிழ் நாட்டின் பழைமை. (2) தமிழின் பழைமை. (3) தமிழின் எளிய வொலிகள். (4) தமிழில் இடுகுறிச்சொல்லும் சுட்டசையும்(Definite Article) இல்லாமை. (5) தமிழில் ஒட்டுச்சொற்கள் சிலவாயிருத்தல்.
|