தமிழொடு பிற மொழிகள் ஒவ்வாமைக்குக் காரணங்கள் (1) தமிழின் பல்வேறு நிலைகளில் மக்கள் பிரிந்து போனமை. தமிழ் குறிப்பொலி நிலையி லிருந்தபோதும், அசை நிலையி லிருந்தபோதும், புணர்நிலையி லிருந்தபோதும், பகுசொன்னிலையி லிருந்தபோதும், தொகுநிலையி லிருந்தபோதுமாகப் பற்பல சமயங்களில், குமரிநாட்டினின்றும் மக்கள் கிழக்கும் மேற்கும் வடக்குமாகப் பிரிந்துபோ யிருக்கின்றனர். (2) குறிப்பொலி நிலையிலும் அசைநிலையிலும் பிரிந்த மாந்தர் அவற்றை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு சொற்களை அமைத்துக்கொண்டமை. (3) பிரிந்துபோன மக்கள் மூலச்சொற்களை மறந்து விட்டுப் புதுச்சொற்களை ஆக்கிக்கொண்டமை. (4) தட்பவெப்பநிலை உணவு முதலியவற்றால் உறுப்புத் திரிந்து, அதனால் உச்சரிப்புத் திரிந்தமை. கா : தோகை - Pers. tawus, Gk. taos, L. Pavo, A.S. pawe, E. pea-peacock. சே - சேவு - (சேக்கு) - A.S. coc, E. cock. ஒ.நோ: நா-நாவு - நாக்கு. (5) பெரும்பாற் சொற்கள் போலி மரூஉ சிதைவு முதலிய முறைகளில் திரிந்தமை. (6) மூலமொழியி லில்லாத வொலிகள் தோன்றினமை. (7) மூலமொழி யிலக்கணத்தினின்றும் வேறுபட்ட இலக்கணம் எழுதப்பெற்றமை. (8) பெரியோரை மதித்தல் காரணமாகச் சொற்களை மாற்றல். பலநீசியத் (Polynesian) தீவுகளில் தெபி (Tepi) என்றொரு வழக்கமுள்ளது. அதன்படி, அரசன் பெயராவது அதன் பாகமாவது வருகின்ற சொற்களையெல்லாம் மாற்றி விடுகின்றனர். இவ் வழக்கம் தென்னாப்பிரிக்காவிலும் உள்ளதாம்.
|