பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் 27

நாட்டுப் பகுதிகள் கொடுந்தமிழ்நாடாகக் கூறப்பட்டன. இதனால், முன்பு கொடுந்தமிழ் நாடாயிருந்தவை பல பின்பு பிறமொழி நாடாய் மாறிவிட்டன என்பதும், செந்தமிழ் நாடு வரவரத் தெற்கு நோக்கி ஒடுங்கிக்கொண்டே வருகின்ற தென்பதும், இதற்குக் காரணம் ஆரியக் கலப்பும் செந்தமிழ்த் தொடர்பின்மையும் என்பதும் அறியப்படும்.

செப்பு என்பது, சொல்லுதல் என்னும் பொருளில் மட்டும் திசைச்சொல்லாகும். மற்றப்படி அது செந்தமிழ்ச் சொல்லே என்பது,

“செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்”

(கிளவி. 13)

“அஃதன் றென்ப வெண்பா யாப்பே”

(செய். 78)

என்பவற்றால் அறியப்படும்.

செப்பு என்பது, தெலுங்கில் சொல்லுதலையும், தமிழில் விடை சொல்லுதலையுங் குறித்தல் காண்க. அதோடு தமிழிலக்கணந் தோன்றிய தொன்முது காலத்திலேயே. செப்பு என்பது ஓர் இலக்கணக் குறியீடாயமைந்ததையும் நோக்குக. (செப்பல் வெண்பா வோசை.)

ஈ தா கொடு என்னும் மூன்று செந்தமிழ்ச் சொற்களில், ஈ என்பது எங்ஙனம் தன் நுண்பொருளை யிழந்து தெலுங்கில் வழங்குகின்றதோ, அங்ஙனமே செப்பு என்பதும் என்க.

தொல்காப்பியர் காலத்தில், தமிழில் வழங்கிய அயன்மொழிச் சொல் வடசொல் ஒன்றே. அதனாலேயே அது தன் பெயரால் வடசொல் எனப்பட்டது. அதன்படி இப்போது தமிழில் வழங்கும் அயன்மொழிச் சொற்களையெல்லாம், ஆங்கிலச் சொல், இந்துஸ்தானிச் சொல் என அவ்வம் மொழிப்பெயராலேயே கூறல் வேண்டும். திராவிட மொழிச் சொற்கள் மட்டும் திசைச்சொல்லாகவே கூறப்படும்.

தொல்காப்பியர் காலத்தில் தமிழில் வழங்கின வடசொற்களும், அருகிய வழக்கேயன்றிப் பெருகிய வழக்கன்று. அவ் வருகிய வழக்கும் வேண்டாமையாய்த் தமிழைக் கெடுத்தற்கென்றே புகுத்தப்பட்டதாகும்.