பெயரான குமரி என்பது சிவன் தேவியாகிய காளியைக் குறித்தலாலும் அறியப்படும். திசைகளைத் தெய்வத்திற்கு முகங்களாகவும் கைகளாகவுங் கூறுவது வழக்கம். திசைகள் முதலாவது நான்கென்றும் பின்பு உயர்திசையைக் கூட்டி ஐந்தென்றும், பின்பு அடித் திசையுங் கூட்டி ஆறென்றும், பின்பு நான்கு பெருந்திசையும் நான்கு கோணத்திசையுமாக எட்டென்றும், பின்பு இவற்றொடு உயர்திசையும் அடித்திசையுங் கூட்டிப் பத்தென்றுங் கூறப்பட்டன. ஐந்து திசைகளும் எட்டுத்திசைகளும், முறையே சிவ பெருமானுக்கு ஐம்முகங்களாவும் எட்டுக் கைகளாகவும், ஆறு திசைகளானவை, முருகனுக்கு ஆறு முகங்களாகவுங் கூறப்பட்டன. ஆறு முகங்கட்கும் முகத்திற் கிரண்டாகப் பன்னிருகைகள் கூறப்பட்டன. சிவபெருமானுக்கும் ஆறு முகம் என்று ஒரு காலத்தில் கொள்ளப்பட்டிருந்தமை, அவர் தமது ஆறுமுகங்களினின்றும் ஆறுபொறியைத் தோற்றுவித்து முருகனைப் படைத்ததாகக் கூறும் கந்த புராணக் கதையாலறியலாம். ஆறுமுகத்தை ஷண்முகம் என்று மொழிபெயர்த்தும், சுப்பிரமண்யன், கார்த்திகேயன், குகன் எனப் புது வடமொழிப் பெயர்களையிட்டும், பனிமலையில் சரவணப் பொய்கையிற் பிறந்ததாகக் கதை கட்டியும், முருகனை ஆரியத் தெய்வமாகக் கூறினர் வடநூலார். முழுமுதற் கடவுளுக்குப் பேரண்டத்தையே வடிவமாகக் கூறுவது வழக்கமாதலால், மாலையில் தோன்றும் செவ்வானம் சிவபெருமானுக்குச் சடையாகவும், செவ்வானத் திற்கு மேலாகத் தோன்றும் பிறையையும் பனிமலையுச்சியில் பிறக்கும் கங்கையையும் அவர் தலையிலணிந்திருப்பதாகவும் உருவகித்துக் கூறினர் முன்னோர். திங்கள் தக்கன் புதல்வியர் இருபத்தெழுவரை மணந்ததாகக் கூறுவது, இராவான் சுடர்கட்குத் தலைமையானது நிலா என்பதே. உடுபதி என்னும் பெயரை நோக்குக. தீ முதன்முதல் வணங்கப்பட்ட தெய்வமாதலாலும், இறைவன் பெரும்பாலும் தீயாக அல்லது ஒளியாக வெளிப்படுவதாலும்,
|