பக்கம் எண் :

செல்லாத காசுகள் 151


பேர்கள் படியாத இந்த நாட்டில் - படித்ததையும் மறந்து விடுகிறவர்கள்
உள்ள இந்த நாட்டில் - படித்தவர்களுள்ளும் குறைவாகவே தமிழ்
படித்தவர்கள் இருக்கும் இந்த நாட்டில், எழுத்தாளர்கள் திருத்தமான -
தவறு இல்லாத - சொற்களை எழுதுவது அவர்களுக்குள்ள பொறுப்பும்
கடமையும் அறமுமாகும்.

சிலர் பேச்சிலும் எழுத்திலும் "என் வீடு அருகாமையில் இருக்கிறது"
என்று, அருகாமை என்னும் சொல்லைப் பயன் படுத்துகின்றனர்.
அருகாமை என்பது தவறு, அருகில் என்க.

ஓரு சிலர் முயற்சித்தல், முயற்சித்தால் என்று எழுதுகின்றனர்.
முயற்சி செய்தல், முயலுதல் என்றும், முயன்றான் என்றும் முறையே
எழுதவேணடும். முயற்சித்தல் என்னும் சொல்லே இல்லை. முயற்சி
என்பது தொழிற்பெயர். இதிலிருந்து எப்படி வினைமுற்றை
உண்டாக்குவது?

நாம் பூவை முகருகிறோம் என்று யாரோ ஓருவர் எழுதினார்.
அதைப் படித்தவர்கள் பூவை முகருகிறோம் என்றே எழுதத்
தொடங்கினார்கள். மோக்கிறோம் என்க. முகருகிறோம் என்பது
தவறான பேச்சு வழக்கு.

பிரதி ஞாயிறுதோறும் விடுமுறை என்று அச்சிட்ட அட்டை கடை
தோறும் தொங்க விட்டிருக்கக் காண்கிறோம். அச்சிட்டு விற்கும்
கல்வியில்லாத அறிஞர் பெருமகனார் இப்படித் தவறாக எழுதி
அச்சிட்டு விற்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பிரதி ஞாயிறு தோறும்
என்று இருப்பது தவறு. ஞாயிறு தோறும் என்றிருக்க வேண்டும்.
பிரதி ஞாயிறு என்பதற்கும் ஞாயிறு தோறும் என்பதற்கும் ஒரே
பொருள் தான் உண்டு. பிரதி என்பது வேண்டுவதில்லை.