பக்கம் எண் :

20நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


2. உரை நடை வரலாறு

"உரைநடையில் நல்ல தமிழ் எழுத வேண்டுமா? அல்லது
செய்யுளில் நல்ல தமிழ் எழுத வேண்டுமா?" என்று யார் கேட்பார்?
ஒருவரும் கேளார். இரண்டிலுமே நல்ல தமிழ் எழுதவேண்டும்
என்று சொல்லவும் வேண்டுமோ? ஆனால், செய்யுள் இயற்ற
விரும்புகிறவர்கள் யாப்பிலக்கண அறிவும் மொழித் தேர்ச்சியும்
பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். உரைநடை எழுதுகிறவர்கள்
நல்ல தமிழ் எழுத மொழித் தேர்ச்சி மட்டும் பெற்றால் போதுமானது.
தமிழ் மொழியைப் பிழையற எழுதுவதற்குரிய வழிகளைத் தெரிந்த
கொள்வதற்கு முன்னர்த் தமிழ் உரைநடை வரலாற்றைச் சிறிது
அறிந்து கொள்வது நன்று.

தமிழ் நாட்டில் உரைநடை நூல்கள் பெருகிவருகின்றன.
தமிழகத்தில் தமிழ்மொழி அரசியல் மொழியாகிவிட்டது. நாளிதழ்களுக்கும்
வார, மாத வெளியீடுகளுக்கும் பொதுமக்களிடத்தில் செல்வாக்கு
மிகுந்து வருகிறது. வருங்காலத்தில் தமிழ் நாளிதழ் ஆசிரியர்களும்,
எழுத்தாளர்களும் மிகவும் மதிக்கப்படுவார்கள். அப்போது நல்ல தமிழ்
எழுத இயலாதவர்களுக்கு மதிப்பு உண்டாகுமா? உண்டாகாது,
எழுத்தாளர் சிலர், “எப்படி எழுதினால் என்ன? பல்லுடைக்கும்
பண்டிதர் தமிழில் எழுத வேண்டுமோ?“ என்று பேசினால் பயனில்லை.
பல்லுடைக்கும் தமிழே இல்லை. அது தமிழ் எழுத வாராதவரின்
அமிழ்த வாக்கு. இதழ் ஆசிரியர்கள், “அரசியல் கருத்தைத் தெளிவாக
எழுதினால் போதாதா? பிழையிருந்தால் என்ன?” என்று விதண்டா
வாதம் புரியலாகாது. மாணவர்களும் இவர்களைப் போல எண்ணி
விடுதல் கூடாது. ஆங்கில நாளிதழ்களில் மொழித்தேர்ச்சி
இல்லாதவர்கள் எழுதுகிறார்களா? இல்லை. தமிழ் மட்டும் என்ன?