பக்கம் எண் :

356நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

சாதாரணமாகப் பெரும்பாலோர் தமிழ்மொழி இலக்கணத்திற்கு
மாறாகக் காற்புள்ளியை உம்மையுடன் சேர்த்துத் தவறாக எழுதி
வருவதை எடுத்துகாட்டாகக் கூறலாம். ‘அண்ணனும், தம்பியும்’
என்று காற்புள்ளியை எண்ணும்மைக்குப் பின் போட்டுத் தவறாக
எழுதுவதைப் பார்த்திருக்கலாம். தமிழிலக்கணத்தில் உம்மையின்
வேலை இணைப்பது. இவ்வும்மையிருப்பதே அங்குப் போதும்.
இஃது எண்ணும்மை எனப்படும். ஆங்கிலத்தில் காற்புள்ளியின்
வேலை பிரிப்பதாகும். தமிழ்மொழி இலக்கண முறைப்படி
எண்ணும்மையால் இணைத்து விட்டு, ஆங்கிலக் குறியீட்டு
முறைப்படி காற்புள்ளியிட்டுப் பிரிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
நீண்ட வாக்கியத்தில் பொருள் தெளிவாக்குவதற்காகக் காற்புள்ளியை
எண்ணும்மைக்குப் பின் இடுவதை வேண்டுமானால் ஒருவாறு ஏற்கலாம்.

காய், கறிகள்-இப்படிக் காற்புள்ளியிடுவது தவறு. இப்படிச் செய்தால்
காய் என்னும் சொல் ஒருமையாகவும், கறிகள் என்னும் சொல்
பன்மையாகவும் மாறிவிடப் பொருளும் வேறுபடும். காய்கறிகள்
என்றே எழுத வேண்டும். காய்கறிகள் என்பது உம்மைத்
தொகையாதலால் இத்தொகையில் காற்புள்ளி இடலாகாது.
தொகைகள் ஒரு சொல் போலக் கருதும் தன்மையுடையன என்பதறிக.
உம்மைத் தொகையில் ஈற்றுவிகுதி பன்மையாக இருக்கும்.

நிறுத்தக் குறியீட்டுத் தவற்றால் சில சமயம் பொருளே வேறுபட்டு
விடும். வாக்கியங்களில் பொருளானது குறியீட்டுத் தவற்றால்
வேறுபடுவது காணலாம்.

நீ பழம், பாக்கு, வெற்றிலை வாங்கி வா.

நீ பழம்பாக்கு, வெற்றிலை வாங்கி வா.

இங்கே பொருள் வேறுபடுவது காண்க.