பக்கம் எண் :

நிறுத்தக் குறிகள் 355


29.
நிறுத்தக் குறிகள்

காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி, உணர்ச்சிக்குறி,
வினாக்குறி முதலான நிறுத்தக்குறிகள் எல்லாம் தமிழ் மொழிக்குப்
புதுமையாவை. இவை தொல்காப்பியத்திலும் இல்லை; நன்னூலிலும்
இல்லை. பயன்கருதி ஆங்கில மொழியிலிருந்து தமிழில் தழுவிக்
கொள்ளப்பட்டவை இவை. ஆங்கில மொழியினால் தமிழ் மொழியி்ல்
ஏற்பட்ட புதுமைகளுள் இக்குறியீட்டு இலக்கணமும் ஒன்று.
வினைமுற்றை இறுதியில் அமைத்தெழுவது, முற்றுப் புள்ளியின்
வேலையைச் செய்து வந்தது. ஏகார ஓகார உம்மைகளும், காற்புள்ளியும்
அரைப் புள்ளியும் ஆகிய இவற்றின் பணியைப் புரிந்து வந்தன.
கி.பி. 18-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஆங்கிலமொழிப் பயிற்சி
நாட்டில் மிகுந்த போது, இந்திய நாட்டு மொழிகள் அனைத்தினும்
ஆங்கில மொழியின் நிறுத்தக் குறியீ்ட்டு இலக்கணம் மிகுதியாகப்
பயன்படுத்தப்பட்டது. அறிஞர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார்,
"குறியீட்டு இலக்கணம் தமிழின்கண் முழுவதும் தழுவிக் கொள்ளப்படல்
வேண்டும். அதனால், பொருள் தெளிவும் விரைவு உணர்ச்சியும்
உண்டாகின்றன. இவை காரணமாகப் படித்தானுக்குப் படித்த
நூலின்கண் ஆர்வமும் உண்டாகின்றது" என்று ஆங்கில
மொழியிலிருக்கும் குறியீட்டிலக்கணத்தைத் தமிழ் மொழியிலும்
தழுவிக்கொள்ள வேண்டிய இன்றியமையாமையை வற்புறுத்தியிருக்கிறார்.
ஆங்கில மொழியின் நிறுத்தக் குறியீட்டிலக்கணத்தை நாம் தழுவிக்
கொள்ளலாம். ஆனால், அதைத் தமிழ்மொழி இலக்கணத்துக்குக்
கேடு செய்யாதவாறு தழுவிக் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்த
வற்புறுத்த விரும்புகிறேன்.