பக்கம் எண் :

390நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


நம்மனோர் தண்ணீரின் அருமையை உணராவிட்டாலும், வேனிற்
காலத்து வெப்பந் தாங்காமல் துடிக்குங்கால் அவர்கள் தண்ணீரே
உயிரென்று கூறுதலைக் காண்கிறோம் அன்றோ? ஆதலால், நீரின்
சிறப்பையும் அதன் இன்றியமையாமையினையுந் தெரியாத உயிர்
இந்நிலவுலகத்தில் ஏதுமே இல்லை என்று திண்ணமாய்ச்
சொல்லலாம்.”

- மறைமலையடிகளார்.

‘‘ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந் நாட்டுப் பழங்குடி
மக்களாக வாழ்ந்து, நாட்டைக் காத்து, நிலத்தைப் பண்படுத்திப்
பாதுகாப்புப் பட்டாளமாக இருந்து வரும் தமிழ்நாட்டு ஹரிஜனங்களை
ஒதுக்கி அழித்து மிதித்து, மாக்களினும் கேடாக மதித்து, ஊருக்குப்
புறம்பே நாகரிகத்துக்கு வெளியே சேற்றிலே புழுதியிலே வாழ்ந்து
வரச்செய்தும், அவர்களுக்கு இழிபட்டம் அளித்தும் ‘பார்த்தால்
பாவம்’, ‘தொட்டால் தீட்டு’, ‘நடந்தால் குற்றம்’ என்று தர்மம்
வகுத்தும், தெருவிலே நுழையவும் முடியாதபடி அவர்களை
மருட்டியும் வதைப்பது நீதியா, முறையா?

கிராமங்கள் இன்று இருண்டு கிடக்கின்றன. உழவர்கள் வாடி
வதங்குகின்றார்கள். பருவ மழையோ இல்லை. பயிர் வளமோ கிடையாது.
பசித் தொல்லையோ பொல்லாதது. லட்சக்கணக்கில் மக்கள்
வாடுகிறார்கள். ஊரை விட்டு வாசலை விட்டு, ஆணும் பெண்ணும்
குட்டியும் குழந்தையும் வாலிபரும் கிழவரும் வானத்தைக் கூரையாகக்
கொண்டு வறண்ட நிலத்தை வீடாக்கிக் கல்லுடைத்து மண்ணெடுத்துக்
காலங்கழிக்கிறார்கள். இப்படி இருப்பவர்கள் எண்ணற்றவர்கள்.
காய்ந்த தலையும் எலும்பும் தோலுமாக இருக்குங் கோலமும், ஒட்டிய
வயிறும் உலர்ந்த உதடும் மருண்ட கண்களும் குழிவிழுந்த கன்னங்களும்
அவர்களிடம் காண்கின்றனவே, அவர்களைப் பார்த்தால் மனம் உருகாதா?
யார் இக்காட்சியைச் சகித்துக் கொண்டிருத்தல் கூடும்? கிராமங்களுக்குச்
செல்லுங்கள். அவர்களை முன்னேற்றி அவர்களது வறுமையை
ஒழியுங்கள்!”

- பேரறிஞர் சி.என். அண்ணாதுரை.