பக்கம் எண் :

முடிவுரை 473


வேண்டுகோள்

இந்நூலில் நல்ல தமிழ் எழுதக் கூறப்பட்டுள்ள வழிகளைப்
பயின்று பயின்று முயன்றால், எவரும் நல்ல தமிழில் கட்டுரையோ
கவிதையோ சிறுகதையோ நெடுங்கதையோ வழுவின்றி எழுதலாம்;
எழுதமுடியும்; எழுதக்கூடும்.

தமிழ் மொழிவழி மாநிலம் ஏற்பட்டுவிட்டது. தமிழ்மொழி
ஆட்சிமொழியாகி விட்டது. தமிழில் எல்லாம் நடத்த வேண்டுவதற்குரிய
காலமும் வந்து விட்டது. இப்பொழுது தமிழ் நாளிதழ்களுக்கு நாட்டில்
எப்போதும் இல்லாத தனி மதிப்பு ஏற்பட்டு விட்டது. தமிழ்
எழுத்தாளர்களுக்கு நல்ல மதிப்பு உண்டாகிவிட்டது. இந்நிலையில்
நாளிதழ்களும் வார மாத ஏடுகளும் சிறு கதைகளும் நெடுங்கதைகளும்
கவிதைகளும் கட்டுரைகளும் பிழையற்ற தமிழில் வரல் வேண்டும்.
எழுத்தாளர்கள் நல்ல தமிழில் வழுவின்றி எழுதும் திறமை
பெறாவிட்டால் அவர்கள் எள்ளி நகையாடும் நிலைக்கு
உரியவராவார்கள்; அவர்கள் எழுதும் நூல்களும் நிலைத்து நிற்கமாட்டா.
தமிழகத்து மாநகர்மன்றங்களும் நகரவைகளும் சிற்றூர்ச் சபைகளும்
மற்ற நிலையங்களும் கூட்ட நிகழ்ச்சிகளையும் வேறு வெளியீடுகளையும்
நல்ல தமிழில் வெளியிட முயற்சி செய்கின்றன.

ஆதலால், பலரும் நல்ல தமிழில், பிழையிற்ற தமிழ் மொழியில்,
எழுதும் திறமை பெற்று, எண்டிசையும் புகழ்மணக்க இருந்துவரும்
தண்டமிழ் மொழிக்கு - உலகத்தில் இந்நாளில் பெருமதிப்படைந்து
வரும் நந்தமிழ் மொழிக்கு - இளமைத் தன்மையை விடாது
காலத்துக்கு ஏற்றவாறு வளம்படுத்திக் கொண்டிருக்கும் கன்னித்
தமிழ்மொழிக்கு - இகழ்ச்சி ஏற்படாத வகையில் நற்றொண்டு செய்ய
முற்படுக!

நாட்டில் பெருகுக நல்ல தமிழ்!