பக்கம் எண் :

சில காரணப் பெயர்களின் வரிசை 477

குழம்பு - குழைந்திருப்பது.
கை - செய்வதற்குரியது. இது தெலுங்கில் செய்
எனப்படும். செய் என்பது கை எனத் திரிந்தது.
கொப்பூழ் - கொய்பூழ், கொய்யப்பட்டதால் உள்ள துவாரம்,
இது தொப்புள் என்று தவறாக வழங்கப்படுகிறது.
கொறுக்காய்புளிக்காய். - இது கொடுக்காய்ப்புளி என்பதன் மரூஉ.
வளைந்த புளி வகையைச் சேர்ந்த காய். இச்சொல்
தவறாக வழங்கப்படுகிறது.
கோவில் - (கோ+இல்) தலைவன் அல்லது கடவுள் இருக்கும் இடம்.
சகோதரர் - (சக+உதரர்) ஓரே வயிற்றிலிருந்து பிறந்தவர். உதரம் - வயிறு.
(உடன் பிறந்தவர்)
சாக்கடை - சாய் கடை. வீட்டுக் கடைப்பகுதியில் நீர் செல்லச்
சாய்ந்திருக்கும் அமைப்பு. (கழிவு நீர் செல்லும்
கால்வாய்)
சுவர் - சுவல் - தோள். தோள் போலக் கூரையைத்
தாங்குவது, சாம்பல் என்பது சாம்பர் என்றாவது
போல, சுவர் என்பது லகர ரகரப் போலி பெற்று
வழங்குகிறது.
சோறு - சொல் - நெல். சொல்லுள் (நெல்லுள்) இருப்பது
சோறு.
ஞாலம் - தொங்கிக் கொண்டிருப்பது. நாலுதல்- தொங்குதல்.
ஞகர நகரப் போலி.
தங்கை - தனக்குப் பின் பிறந்தவள்.
தட்பம் - தண்மை (குளிர்ச்சி) உடையது.
தந்தை - தன்னைத் தந்தவன்.