பக்கம் எண் :

8நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


வடமொழியில் ஒருமை, இருமை, பன்மைச் சொற்கள் உள்ளன. தமிழில்
ஒருமை அல்லாதன எல்லாம் பன்மையே. திணைப்பாகுபாடு,
குறிப்புவினைமுற்று முதலியன தமிழுக்கே உரியன" என்று தமது
‘கலைபயில் கட்டுரை’ என்னும் நூலில் வடமொழிக்கும் தமிழ்
மொழிக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளை எடுத்துக்
காட்டியுள்ளார். டாக்டர் பி.எஸ். சாஸ்திரியார், இன்னும்
வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் உள்ள பல வேறுபாடுகளைத்
தமது ‘தமிழ் மொழி நூல்’ என்பதில் விளக்கியிருக்கிறார். அகவற்பா,
கலிப்பா, வெண்பா, வஞ்சிப்பா முதலியவை தமிழ் மொழிக்கே
உரியவை. ஆதலால், தமிழ்மொழி வடமொழியினின்று பிறந்தது
அன்று என்றும், வடமொழியிலிருந்து வேறுபட்ட பண்புடையது
தண்டமிழ்மொழி என்றும் நன்கறியலாகும்.

தமிழ்மொழியைக் குறித்துப் பலர்

இத்தகைய தன்மை வாய்ந்த தமிழ்மொழியின் அருமை
பெருமைகளைத் தமிழ்க் கவிஞர்களும், அறிஞர்களும், தமிழ் கற்று
ஐரோப்பிய அறிஞர் பெருமக்களும் நன்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.
மாணிக்கவாசகர் "ஒண் தீந்தமிழ்" என்றும், "தண்ணார் தமிழ்"
என்றும் பாடியிருக்கிறார். கம்பர், "என்றுமுள தென்தமிழ்" என்று
தமிழைப் பாராட்டியுள்ளார். தஞ்சைவாணன் கோவை ஆசிரியர்,
"தேருந்தொறும் இனிதாம் தமிழ்" என்றார். திருவிளையாடற் புராணம்
பாடிய பரஞ்சோதி முனிவர், "மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா
மொழிபோல் எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?"
என்று பாடினார். வேறொரு கவிஞர், "தன் தேர் இலாத் தமிழ்" என்று
ஞாயிற்றுக்கும் ஞாலம் புகழும் தமிழுக்கும் ஒப்பிட்டுக் கூறினார்.
வடமொழி, ஆங்கிலம் முதலிய மொழிகளை அறிந்த தேசியக் கவிஞர்
பாரதியாரோ, "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது
எங்கும் காணோம்" என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறினார். இப்படித்
தமிழ்க் கவிஞர்கள் தங்களுடைய பாடல்களில் தமிழின் அருமையினையும்
பெருமையினையும் நன்கு எடுத்துக் காட்டியிருப்பதைக் காண்கிறோம்.