|
ப
பிராமணர் தமிழ்நாட்டை விட்டுப்
பெயரவும் முடியாது. இனிமேல் தமிழரை அவர் ஏமாற்றவும் முடியாது. எல்லாத் தமிழரும் சான்றோரு மல்லர்;
எல்லாப் பிராமணரும் கயவருமல்லர். ஆரியத்தை யெதிர்த்துத் தமிழைப் பேணிய நக்கீரர், பரிதிமாற்
கலைஞர், சீநிவாச ஐயங்கார், இராமச்சந்திர தீட்சிதர்,
Dravidian India எழுதிய சேச(சேஷ)
ஐயங்கார், கடை வள்ளலார் காலம் எழுதிய (S) கிருட்டிணசாமி ஐயங்கார் முதலிய பிராமணர் பலர்,
வையாபுரிப் பிள்ளையினும், தெ.பொ.மீ.யினும் சிறந்த தமிழரே. ஆதலால், இனிமேல், பிராமணர்
அனைவரும் பிணக்கின்றித் தமிழரொடு பிணைந்து வாழ்ந்து, தமிழ்நாட்டரசிலும் தலைமை தாங்கித்
தமிழையே பேணித் தமிழராகவே விளங்குவராக. இந்து, இந்தியன் எக்கசுபிரசு(Express) ஆகிய இரு
சிறந்த உலகப் பொது ஆங்கில நாட்சரி ஆசிரியர் இதைக் கவனிப்பாராக.
மாநாடு நடைமுறை
மண்ணுலகில் மதிமாந்தன்
(Homo Sepiens) தோன்றியதிலிருந்து இடையறாது வழங்கிவரும் உலக முதல் உயர்தனிச் செம்மொழியாகிய
தமிழ், இலத்தீன் போன்று இறந்த மொழியுமன்று; சமற்கிருதம் போன்று எழுத்து மொழியுமன்று. ஆதலால்,
மாநாட்டு நிகழ்ச்சிகள் யாவும் பொதுமக்கட்கும் விளங்குமாறு தமிழிலேயே நடைபெறுதல் வேண்டும்.
மாநாட்டு மண்டபம் எல்லாரையும் கொள்ளாதாதலால்,வெளிநாட்டு விருந்தினரும் புலவரும் பெருமக்களும்
மண்டபத்திற்குள்ளும், பொது மக்கள் மண்டபத்தின்முன் வெளியே ஒலிபெருக்கிகளும் தொலைக் காட்சிகளும்
சுடர்விளக்குகளும் பொருத்தி மாபெரும் பந்தலடியிலும் இருத்தல் வேண்டும்.
வெளிநாடுகளினின்று வரும் படிநிகராளியரும்
(Representatives) தமிழ் பேசவியலாவிடினும் அச்சிட்டதைப் படிக்கவாவது தெரிந்திருத்தல் வேண்டும்.
ஓர் ஆங்கில மாநாட்டில், ஆங்கில மறியாத ஒருவர் தம் தாய்மொழியிற் பேசவாவது படிக்கவாவது
இசைவுபெற இயலுமா என்று எண்ணிப் பார்த்தல் வேண்டும். இதுவரை நான்கு மாநாடுகள் ஆங்கிலத்தில்
நடைபெற்றுவிட்டதனால், இந்த மாநாட்டில் மட்டும் தமிழ் தெரியாத வெளிநாட்டார்க்குத் தவிர்ப்புக்
கொடுக்கலாம். ஆயின், அது ஒரு தனி நிகழ்ச்சியாயிருத்தல் வேண்டும்.
இது மொழி மாநாடாதலால், அதிகாரம்,
கட்சி, செல்வம், நட்பு முதலிய சார்பின்றி, இயன்றவரை புலவரின் வரிசையறிந்து போற்றல் வேண்டும்.
மாநாட்டுக் கட்டுரைகளையும் நிகழ்ச்சிகளையும்
அடக்க விலைப் பதிப்பில் வெளியிட்டு விற்றல் நன்று.
|