|
என
என்றதனால், கொடுந்தமிழ் நாட்டுச் சொல்லே திசைச்சொல்
என்பது பெறப்படும். ‘சேர்ந்த’ என்பது ‘அடுத்த’ என்று பொருள்படுமே யன்றி, ‘சூழ்ந்த’ என்று
பொருள்படாது. தமிழின் பிறந்தகம் குமரிநாடேயாதலால், செந்தமிழ் நாடு தெற்கும் கொடுந்தமிழ்
நாடு அதன் வடக்கும் உள்ளன என்றறிதல் வேண்டும். பாண்டியனுக்கே தமிழ்நாடன் என்று சிறப்பாகப்
பெயருண்மையும், “திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன்” என்னும் வழக்கும், கவனிக்கத்
தக்கன.
கொடுந்தமிழ் நாட்டுச் சொல் வேறு. கொடுந்தமிழ்ச்
சொல் வேறு. கொடுந்தமிழ் நாட்டில் தோன்றிச் செந்தமிழ்ச் செய்யுளில் இடம் பெறத் தக்க திருந்திய
சொல்லே திசைச்சொல்லாம். அது சமாளி (சமாளிசு) என்னுங் கன்னடச் சொல் போல்வது. தல்லி
(தெ.), தம்முடு (தெ.) என்பன போன்ற கொச்சைச் சொற்கள் செந்தமிழ்ச் செய்யுளில் இடம்பெறா.
“ஏமிரா வோரி யென்பாள் எந்துண்டி வஸ்தி யென்பாள்” என்னும் கொண்டுகூற்றும், “ஏமிரா வோரி
யென்பாள் எந்துண்டி வத்தி யென்பாள்” என்றே யிருத்தல் வேண்டும். அல்லாக்கால், அயலெழுத்துப்
புணர்ந்து அயன்மொழியாகிவிடும் என அறிக.
தொல்லிலக்கண நூலார் திசைச்சொல் வழக்கிற்கும் இடந்தந்தா
ரென்று, அயன்மொழிச் சொற்களையெல்லாம் திசைச்சொல்லென்று கொள்வது திரிபுணர்ச்சியாகும்.
“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி’’
(தொல்.
எச்ச. 4)
இதன் இளம்பூரணர் உரை:
செந்தமிழ் நாட்டை அடையும் புடையும் கிடந்த பன்னிரு நிலத்தார் தங் குறிப்பினையே இலக்கணமாக
வுடைய திசைச்சொற் கிளவிகள் என்றவாறு,
வரலாறு:
தாயைத் தள்ளை என்ப குடநாட்டார்.
நாயை ஞமலி என்ப பூழிநாட்டார்.
பிறவும் அன்ன.
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலமாவன:
பொதுங்கர் நாடு, தென்பாண்டி நாடு, ஒளிநாடு, குட்ட நாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு,
பூழி நாடு, மலை நாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு, குடநாடு.
சேனாவரையர் உரை:
செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு நிலத்துந் தாங்குறித்த பொருள் விளக்குந் திசைச்சொல்
என்றவாறு என்றது, அவ்வந் நிலத்துத் தாங்குறித்த பொருள் விளக்குவதல்லது அவ் வியற்சொல்
போல எந்நிலத்துந் தம் பொருள் விளக்கா வென்றவாறாம்.
|