பக்கம் எண் :

58செந்தமிழ்ச் சிறப்பு

பழஞ

பழஞ் செய்யுள்கள்

    “தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி
    பன்றி அருவா அதன்வடக்கு - நன்றாய
    சீதம் மலாடு புனனாடு செந்தமிழ்சேர்
    ஏதமில் பன்னிருநாட் டெண்’’

    “சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந் துளுக்குடகம்
    கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலுங்கங் கலிங்கவங்கம்
    கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலந்
    தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே.’’

    பண்டைக் கொடுந்தமிழ் மொழிகளே வரையிறந்து வடசொற் கலந்து, இன்று திரவிட மொழிகள் என்று வழங்குகின்றன. தமிழ், ஆரியச் சொல் ஒன்றும் வேண்டாத தூய மொழியாதலாலும், தெலுங்கு, கன்னட, மலையாளம் முதலிய ஏனைய இனமொழிகள் ஆரியத்தை யகற்றும் ஆற்றலற்றுப் போனமையாலும், தமிழையும் திரவிட மொழிகளையும் பிரித்தறிதல் வேண்டும்.

    தலைக்காலக் கொடுந்தமிழ் மொழிகள் பிராகிருத மொழிகளாகவும், இடைக்காலக் கொடுந்தமிழ் மொழிகள் திரவிட மொழிகளாகவும் பிரிந்து போனதினாலும்; கடல் தாண்டிய வெளிநாட்டு இடப்பெயர்கள் பல வணிகத் தொடர்பால் வந்து வழங்கியதனாலும், நச்சினார்க்கினியரும், தெய்வச் சிலையாரும், பன்னிரண்டையுஞ் சூழ்ந்த பன்னிரு நிலங்களையும் கொடுந்தமிழ் நிலங்களாகக் கொண்டனர். பவணந்தி முனிவரோ, பதினெண் மொழி நாடுகளுள் தமிழொழிந்த பிறவற்றையெல்லாம் கொடுந்தமிழ் நாடுகளாகக் கூறிவிட்டனர். இதுவே பிறமொழிச் சொற்களையெல்லாம் திசைச்சொல்லெனச் சிலர் மயங்குதற்கு இடந் தந்துவிட்டது.

    ‘அந்தோ’ என்பது ‘அத்தோ’ என்பதன் திரிபான செந்தமிழ்ச் சொல்லே. இது வடமொழியில் ‘ஹந்த’ என்று திரியும். ஆதலால், இது சிங்களச் சொல்லுமன்று; வடசொற் சிதைவு மன்று.

    வடசொல், மொழியாராய்ச்சி இல்லாக் காலத்தில் வேண்டாது புகுத்தப்பட்டதனால், அது இனி அறவே விலக்கப்படும். அதனோடு பிற அயன்மொழிச் சொற்களும் விலக்கப்படும். தூய்மையே தமிழுக்கு உயிர்நாடியாதலால், தமிழ் வாழ்தற்கு, அயன்மொழிச் சொல் விலக்கு இன்றியமையாததென அறிக.

    - “தமிழம்” 1.7.1974