பக்கம் எண் :

மலையாளமும் தமிழும்67

    ஒ.நோ:  யான் - நான், யமன் - நமன்.

    இம் முறையில், எழுதியால் - எழுதினால், ஊதியால் - ஊதினால், தீண்டியால் - தீண்டினால், கூடியால் - கூடினால், தோன்றியால் - தோன்றினால், தேறியால் - தேறினால் என யகர வுடம்படுமெய் பெற்ற எதிர்கால வினையெச்சங்களி லெல்லாம், அவ் யகரமெய் னகரமெய்யாகத்  திரியப் பெறும். இம் முறையிலேயே, ஆயால்-ஆனால், போயால் - போனால் எனவும் வரும். ஆயின், 'ஆயினால்', 'போயினால்' எங்ஙனம் ஆயினவெனின் 'ஆயி' 'போயி' என்னும் வடிவுகளே 'ஆல்' விகுதி சேர்ந்து ஆயியால்-ஆயினால், போயியால் - போயினால் என முறையே திரிந்தனவென்க. இதனால் 'இன்' என ஓர் இறந்தகால விடைநிலை இல்லை என்பதும் பெற்றாம்.

    இறந்தகால வினையெச்ச வடிவுகளே, முதற்காலத்தில் இற்றை மலையாளத்திற்போல் முற்றாகவுமிருந்து பின்னர் முற்றை வேறுபடுத்து வான் வேண்டி பாலீறு பெற்றனவாதலின், இறந்தகால  முற்றுகளை உறுப்புப் பிரித்துக் காட்டற்கு முதற்கண் எச்சமும் ஈறுமாகவே பிரித்துக் கோடல் வேண்டும்.

எ-டு:

வந்து

+

ஆன்

-

வந்தான்

 

கண்டு

+

ஆன்

-

கண்டான்

 

சென்று

+

ஆன்

-

சென்றான்

 

காட்டி

+

ஆன்

-

காட்டியான்-காட்டினான்

 

போயி

+

ஆன்

-

போயியான்-போயினான்

 

போயி-போய்

+

ஆன்

-

போயான்-போனான்

    இங்ஙனம் பிரித்துக் காணும்போது, நிலைமொழிக்கு உகர வுயிர்மெய் யீறும் இகர வுயிர்மெய் யீறுமன்றி 'இன்' ஈறின்மை கண்டு தெளிக.

    எழுதியால்,  கிட்டியால் என்னும் யகர வுடம்படுமெய் பெற்ற எதிர்கால வினையெச்சங்களும், ஆயி, போயி என்னும் இகரவீற்று இறந்தகால வினையெச்சங்களும், சோழ பாண்டி நாடுகளில் வழக்கு வீழ்ந்து போயினும், மலையாள(சேர) நாட்டில் இன்றும்  வழக்காற்றில் இருந்துவருகின்றன. இவையே முந்திய வடிவுகளாம்.

    "இகர யகரம் இறுதி விரவும்"

(தொல். மொழி. 25)

என்னும் தொல்காப்பிய நூற்பா இங்குக் கவனிக்கத்தக்கது.

    நாஇ - நாயி - நாய் என்பதுபோன்றே ஆஇ - ஆயி - ஆய் என்பதும் என அறிக.

    இனி, வடநாட்டு மொழியாகிய இந்தியிலும் பிற ஆரிய மொழி களிலும் எழுவாய்ப் பெயரையும் பெயர்ப் பயனிலையையும் இணைக்கும்  'இரு' என்னும் புணர்ப்புச் சொற்கும் (copula),  மலையாளம் அடிகோலி யிருந்திருக்கின்றது என்னலாம்.