| திசைச்சொல் | | திசைச்சொல் என்பன, பண்டைச் செந்தமிழ் நாட்டைச் சூழவி ருந்த பல திசைக் கொடுந்தமிழ் நாடுகளினின்றும் தமிழில் வந்து வழங்கிய சிறப்புச் சொற்கள். ஆகவே, செந்தமிழ் நாட்டுச் சொல் திசைச்சொல் எனப்படாது. | | தமிழின் பிறந்தகம் தென்பெருவாரியில் மூழ்கிப்போன பழம் பாண்டி நாடாதலாலும், தமிழை வளர்த்த முக்கழகமும் பாண்டி நாட்டி லேயே இருந்தமை யாலும், இன்றும் பாண்டி நாட்டிலேயே ஓரளவு சிறந்த தமிழ் பயின்று வருதலாலும், பாண்டிநாட்டைத் தமிழ் நாடென் றும், பாண்டியனைத் தமிழ் நாடனென்றும் உரிச்சொற்றொகுதிகள் (நிகண்டுகள்) சிறப்பித்துக் கூறுவதாலும், | | | "சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும் சவுந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனும் சங்கப் புலவருந் தழைத்தினி திருக்கும் மங்கலப் பாண்டி வளநா டென்ப." | | | "வேழ முடைத்து மலைநாடு மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து-பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து." | (ஒளவையார்) | | | "நல்லம்பர் நல்ல குடியுடைத்து சித்தன்வாழ் வில்லந் தொறுமூன் றெரியுடைத்து-நல்லரவப் பாட்டுடைத்து சோமன் வழிவந்த பாண்டியநின் நாட்டுடைத்து நல்ல தமிழ்." | | | என்னும் பழம் பாட்டுக்களாலும், பாண்டிநாடே செந்தமிழ் நாடென்பது தெளிவாம். | | தமிழ்நாடு பரப்பிலும் மொழித்திறத்திலும் குன்றிக்கொண்டே வந்ததினால், செந்தமிழ் நாட்டளவு காலந்தோறும் மாறிக்கொண்டேயி ருந்திருக்கின்றது. ஆயினும், பிற்காலத்தார் கூறுகின்றவாறு, வைகையின் வடக்கு செந்தமிழ் நாடாகாது. | | செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரு கொடுந்தமிழ் நிலமாவன: "குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும்; சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடகமும் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும், வடுகும் தெலிங்கும் கலிங்கமும்" என்றார் தெய்வச் சிலையார். சிங்களமொழி தோன்றுமுன், கொடுந்தமிழ் நிலம் இன்னும் வேறுபட்டிருந்திருத்தல் வேண்டும். நன்னூலார், தொல்காப்பியர் எண்ணிய பன்னிரு நிலத்திற்கு மேலும் ஆறு சேர்த்துப் பதினெண்ணிலம் என்றது பெருந்தவறாம். இதனால், திசைச் சொல்லை அயன்மொழிச்சொல்லெனப் பெரும்புலவரும் மயங்க நேர்ந்தது. | | |
|
|