பக்கம் எண் :

மதிப்புரை மாலை129

     திசைச்சொல் என்பது கொடுந்தமிழ்ச் சொல்லே. பலதிசையி னின்று வந்து வழங்கியதால், ஒரு குறிப்பிட்ட நாட்டின் அல்லது கிளைமொழியின் பெயரால் அதைக் குறியாது, பொதுப்படத் திசைச் சொல் என்றனர் இலக்கணியர். திசைச் சொல், சிறப்புச்சொல்லும் சிறப்புப் பொருளிழந்த சொல்லும் என இரு வகைப்படும்.

    

எ-டு :

தெலுங்கு :

இராயசம் - சிறப்புச் சொல்.
செப்பு - சிறப்புப் பொருளிழந்த சொல்.

     தொல்காப்பியர் காலத்தில் தமிழில் வழங்கிய அயன்மொழிச் சொல் வடசொல் ஒன்றே. அதனால் அதை வடசொல் எனப் பிரித்துக் கூறினார். இங்ஙனமே, பிற அயன்மொழிச் சொற்களையும் அவ்வம் மொழிப் பெயராற் குறித்தல் வேண்டும். முன்பு கொடுந்தமிழாயிருந்தன இன்று திரவிட மொழிகள் எனத் திரிந்தும் வடமொழியொடு கலந்தும் உள்ளன. இதனாலும், திசைச்சொல் என்பது அயன்மொழிச் சொல் லெனச் சில இலக்கணப் புலவரும் பிறழ்ந்துணர நேர்ந்தது. சில திரவிட மொழிகள் ஆரியமாகவும் மாறியுள்ளன. இதைப் பஞ்ச திரவிடம் என்னும் பண்டை வழக்கும் வடநாட்டு மொழி வரலாறும் உணர்த்தும்.

யாது, எது.
  "யாதெவன் என்னும் ஆயிரு கிளவியும்
அறியாப் பொருள்வயிற் செறியத் தோன்றும்."
 
  "அவற்றுள்,
யாதென வரூஉம் வினாவின் கிளவி
அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத்
தெரிந்த கிளவி யாதலு முரித்தே."

(கிளவியாக்கம், 31, 32)

என்றார் தொல்காப்பியர்.
     இவற்றிற்கு: "யாது எவனென்னும் இரண்டு சொல்லும் அறியாப் பொருளிடத்து வினாவாய் யாப்புறத் தோன்றும் என்றவாறு"
     "உதாரணம்: இச்சொற்குப் பொருள் யாது, இச்சொற்குப் பொருள் எவன் எனவரும்."
     "எவ்வகையானும் அறியாப் பொருள் வினாவப்படாமையின், ஈண்டறியாப் பொருளென்றது பொதுவகையான் அறியப்பட்டுச் சிறப்பு வகையான் அறியப் படாத பொருளையாம்.
     "கூறப்பட்ட இரண்டனுள் யாதென்னும் வினாச்சொல் அறியாப் பொருள் வினாவாதலேயன்றி, அறிந்த பொருட்கண் ஐயநீக்குதற்கு ஆராய்ந்த சொல்லாதலு முரித்து, என்றவாறு.
     "உதாரணம்: இம்மரங்களுட் கருங்காலி யாது, நம்மெருது ஐந்தனுட் கெட்ட வெருதியாது, என வரும்." என்று உரை கூறினார் சேனாவரையர்.
     பொதுவாக, யா வினாவடி அறியாப் பொருள் வினாவிற்கும், எகர ஏகார வினாவடி அறிந்த பொருள் வினாவிற்கும், சிறப்பாக ஏற்கும்.