"சமற்கிருதக் கல்வெட்டுகளுள்
மிகப் பழமையானதாக அறியப்பட்டது கத்தியவாரில் சுனாகரில் ஒரு பாறை மேலுளது. அஃது உருத்திர தாமன்
கல்வெட்டென்னும் பெயர் கொண்டது. அது கி.பி. 2ஆம் நூற்றாண்டினது. அது நாகரியில் இல்லை;
பழைய கல்வெட்டெழுத்துகளில் உள்ளது. ஏறத்தாழக் கி.பி. 400ஆம் ஆண்டினதான பவர் கையெழுத்துப்படி
நாகரி நோக்கிய பெரு முன்னேற்றத்தைக் காட்ட, கி.பி. சுமார் 750ஆம் ஆண்டினதான தந்திதுருக்கன்
கல்வெட்டு இற்றை வழக்கிலுள்ள நாகரியை மிகவும் ஒத்த ஒரு நிறைவான குறித்தொகுதியை காட்டுவதாயுள்ளது.
எனினும், உண்மையான தற்கால நாகரியில் உள்ள முதற் கையெழுத்துப்படி, கி.பி. 11ஆம் நூற்றாண்டிற்கு
முற்பட்டதன்றென்பது கவனிக்கத்தக்கது."
தென்னாட்டுக் கிரந்தமும்
வடநாட்டுத் தேவநாகரியும் முதற்கண் உலகியற் கலை நூல்கட்கே பயன்படுத்தப்பட்டு வந்தன. இன்று
மறை நூல்களும் அவற்றில் எழுதப்பெறுகின்றன.
ஆழ ஊன்றி நோக்கும்
நடுநிலை ஆய்வாளர்க்கு, கிரந்தமும் தேவநாகரியும் தமிழெழுத்தினின்றே தோன்றினவென்னும் உண்மை,
முறையே, வெளிப்படையாகவும் குறிப்பாகவும் தோன்றாமற் போகாது.