பக்கம் எண் :

94தென்சொற் கட்டுரைகள்

சிலை

    சிலை என்னும் சொல் வடமொழியில் கல் அல்லது பாறை என்றே பொருள்படும். Silex என்னும் இலத்தீன் சொல்லும், அதனின்று திரிந்த silica என்னும் ஆங்கிலச் சொல்லும் வன்கல்லை (second stone) யன்றி உருவச் சிலையைக் குறியா. நாம்தான் அதைக் கருவியாகுபெயராய் உருவம் என்னும் பொருளில் வழங்குகின்றோம்.

    சிலா சாசனம் = கல்லில் எழுதப்பட்ட கட்டளை, கற்பட்டயம், விக்கிரகம், மூர்த்தம் என்பனவே உருவத்தைக் குறிக்கும் வடசொற்கள். மூர்த்தம் உடையவன் மூர்த்தி. ப்ரதிமா என்பது தென்சொற்றிரிபு.

    நாம் கற்சிலை என்பதுபோல் வடவர் சிலாசிலா என்ன முடியாது இருப்புச்சிலை, வெள்ளிச்சிலை, செப்புச்சிலை, பொற்சிலை, வெண்கலச் சிலை என்று உருவப்பொருளில்தான் வழங்குகின்றோம். கற்பொருளில் என்றும் வழங்குவதில்லை. தெய்வ உருவம் தெய்வச்சிலை எனப்படும்.

    வடமொழியில் கல் என்னும் பொருட்கும் வேர் அல்லது முதனிலை இல்லை. மானியர் வில்லியம்சு தம் அகரமுதலியில், ஒருகால் 'சி' மூலமாயிருக்கலாம் என்பர். 'சி' என்பதற்கு நல்கு, பொந்திகை (திருப்தி)ப் படுத்து, கூராக்கு என்னும் பொருள்கள்தாம் உண்டு. அவை பொருந்தா. தமிழிலும் திட்டமாகவோ, தேற்றமாகவோ மூலங்காட்டுதற் கில்லை. சிலை என்னுஞ் சொற்குச் சில் என்பதுதான் மூலமாயிருத்தல் வேண்டும்.

  சில்  = துண்டு, வட்டம், வட்டப்பொருள்.
  சில்லெனல்  = குளிர்தல், ஒலித்தல்.
  சில் - சிலை  = வளைந்த வில், ஒலிக்கும் எதிரொலி.
  சில் - சிலம்பு  = ஒலிக்கும் கழல் (பரல் இடப்பட்ட காலணி), எதிரொலியிடும் மலை, ஒலிக்கும் சிலம்பக் கழி. (சிலம்பு - சிலம்பம்).
  சிலைத்தல்  = ஒலித்தல், முழங்குதல், ஆரவாரித்தல் - 'மலைபடுகடாம்' இக்கருத்தது. பாடும்போது எதிரொலித்தலைச் சிலையோடுதல் என்பர் நெல்லை நாட்டார்.
  சில் என்பது வட்டம் என்னும் கருத்தில் சுல் என்பதன் திரிபாகும்.
  சுலவுதல்  = வளைதல். துண்டு என்னும் கருத்துதான் சில் என்பதைச் சிலையோடு இணைக்க ஓரளவு உதவும்.
  சில் - சிலுக்கு  = வெட்டின துண்டு; சிலுக்கு - சிதுக்கு - செதுக்கு.
  (ல  - த போலி) ஒ.நோ: சலங்கை - சதங்கை; கலம்பம் - கதம்பம்; மெல் - மெது.
  சில் - சிலை  = வெட்டின அல்லது செதுக்கின உருவம். ஆதலால், கல் என்னும் பொருள் தமிழில் இல்லை.